சுவிட்சர்லாந்து வரலாற்றில் முதன்முறை; ரோஜர் பெடரர் உருவம் பொறித்த நாணயம் வெளியிட முடிவு

சுவிட்சர்லாந்தில் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரரை கவுரவிக்கும் வகையில் அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்படுகிறது.

Update: 2019-12-03 06:51 GMT
பெர்ன்,

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்தவர் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் (வயது 38).  இவர், டென்னிஸ் போட்டிகளில் அதிரடியாக விளையாடி 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கிறார்.

இங்கிலாந்து நாட்டில் இந்த வருடம் நடந்த விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்திற்கான இறுதி போட்டியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிக்கை எதிர்கொண்டார்.  இந்த போட்டியானது 4 மணி நேரம் மற்றும் 57 நிமிடங்கள் நடந்தது.  இதனால் நீண்டநேரம் நடந்த போட்டி என்ற சாதனையையும் பதிவு செய்துள்ளது.  எனினும் இந்த போட்டியில் 7-6, 1-6, 7-6, 4-6, 13-12 என்ற செட் கணக்கில் ஜோகோவிக்கிடம் பெடரர் தோல்வியுற்றார்.

இதன்பின் நடந்த பிரெஞ்சு ஓபன் போட்டியில் அரையிறுதி வரை முன்னேறி இந்த வருடத்திற்கான ஏ.டி.பி. தரவரிசை பட்டியலில் 3வது இடம் பிடித்துள்ளார்.  டாப் 3க்குள் பெடரர் இடம் பிடித்துள்ளது இது 15வது முறையாகும்.

சுவிட்சர்லாந்து அரசு அடுத்த வருடம் ஜனவரியில் 20 சுவிஸ் பிராங்க் நினைவு நாணயங்களை வெளியிடுகிறது.  இதில், பெடரரை கவுரவிக்கும் வகையில் அவரது உருவம் பொறித்த நாணயம் ஒன்றையும் வெளியிட முடிவு செய்துள்ளது.  அந்நாட்டு வரலாற்றில் முதன்முறையாக, வாழும் மனிதர் ஒருவருக்கு சுவிஸ் நினைவு நாணயம் வெளியிடப்படுகிறது.

இதற்கு பெடரர் டுவிட்டரில் நன்றி தெரிவித்து கொண்டார்.  கவுரவம் மற்றும் சிறப்புரிமை வழங்கிய சுவிட்சர்லாந்து அரசுக்கு நன்றி என அதில் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்