8 ஆண்டுகளுக்கு பிறகு மின்சார கட்டணம் உயர்வு

கொரோனா பாதிப்பில் பெருமளவு வருவாய் வீழ்ச்சியினால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் அந்த பள்ளத்திலிருந்து முழுமையாக மேலே எழுந்து வரவில்லை.

Update: 2022-07-20 19:59 GMT

கொரோனா பாதிப்பில் பெருமளவு வருவாய் வீழ்ச்சியினால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் அந்த பள்ளத்திலிருந்து முழுமையாக மேலே எழுந்து வரவில்லை. இதற்கிடையில், பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, வீட்டு வரி உயர்வு, அரிசி, பருப்பு, மோர், தயிர், கோதுமை போன்ற அத்தியாவசிய 20 வகையான உணவு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், சேவைகள் ஆகியவற்றுக்கு சரக்கு சேவைவரி உயர்வு போன்ற பல அம்புகள் நாலா பக்கங்களிலும் இருந்து வந்து தாக்கிக்கொண்டிருக்கும் நேரத்தில், இப்போது மின்சார கட்டண உயர்வையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில், மின்சார கட்டணத்துடன் ஒவ்வொரு முறையும் வசூலிக்கப்படும் நிலைகட்டணம் ரூ.50 தடை செய்யப்படும் என்பதை நிறைவேற்றும் விதமாக, இரு மாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதனால் 2 கோடியே 37 லட்சம் வீட்டு மின்நுகர்வோர்களும் பயனடைவார்கள் என்ற அறிவிப்பு பாராட்டுக்குரியது. அனைத்து மின்நுகர்வோருக்கும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும், குடிசை இணைப்புகளுக்கு தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும், விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிபாட்டுதலங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும் என்று அறிவித்திருப்பதும் வரவேற்புக்குரியதாகும்.

ஆனால், மற்றபடி வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சார கட்டணம் இரு மாதங்களுக்கு 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.27.50 என்ற அளவில் தொடங்கி, பல்வேறு அளவு பயன்பாட்டுக்கு ஏற்ப மாதம் ஒன்றுக்கு ரூ.72.50, ரூ.147.50, ரூ.297.50, ரூ.155, ரூ.275, ரூ.395, ரூ.565 என்ற பல பிரிவுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு உபயோகத்துக்கு மட்டுமல்லாமல், சிறு, குறுந்தொழில்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், விசைத்தறி நுகர்வோர், தாழ்வழுத்த தொழிற்சாலைகள், உயர் அழுத்த தொழிற்சாலைகள், ரெயில்வே, அரசு கல்வி நிறுவனங்கள் என அனைத்து தரப்பினருக்கும் உயரப்போகும் மின்சார கட்டணத்தால், விலைவாசி உயர்வு, கல்வி செலவு, பொருட்களின் உற்பத்தி செலவு என்று பலதரப்பிலும் செலவு அதிகரிக்கும்.

மின் கட்டண உயர்வு பற்றி மின்சார வாரியம் தெரிவித்த காரணம், தற்போதைய கடன் ரூ.1 லட்சத்து 59 ஆயிரத்து 823 கோடியாக உயர்ந்துள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மின்சார வாரியத்தின் இழப்பை அரசே 100 சதவீதம் ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்ததுபோல, முந்தைய காலத்தில் வழங்கப்படாததால், மின்சார வாரியம் நிதி நிறுவனங்களிடம் இருந்தும், வங்கிகளிடம் இருந்தும் கடன் வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது.

கடனுக்காக வட்டி மட்டும் ஆண்டுக்கு ரூ.16 ஆயிரத்து 511 கோடி கட்டவேண்டியது இருக்கிறது. இந்த கட்டண உயர்வால், ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடி அளவுதான் கிடைக்கும். மேலும் பல்வேறு கடன் மற்றும் மானியம் வழங்கவேண்டும் என்றால், மின் கட்டணம் திருத்தப்படாவிட்டால் வழங்கப்படமாட்டாது என்று மத்திய அரசாங்கம் நிபந்தனை விதித்துள்ளது என்று கூறுவதும் சிந்திக்க வைக்கிறது. ஆனால், இப்போது 12 சதவீதம் முதல் 52 சதவீதம் வரை கட்டண உயர்வு என்பதும் தாங்க முடியாத ஒன்று. இந்த கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வரப்போவதில்லை. மின்சார ஒழுங்குமுறை ஆணைய ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, அங்கு இருந்து பொதுமக்களை https://www.tangedco.gov.in/tpno1tariffcell19072022.html என்ற மின்சார வாரிய இணையதளத்தில் ஆகஸ்டு 19-ந்தேதிக்குள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க கேட்கப்பட்டுள்ளது. 30 நாட்களில் பலதரப்பு பொதுமக்களும் தங்களின் குறைகளை தெரிவித்தால்தான், ஒழுங்குமுறை ஆணையம் இந்த கட்டண உயர்வு குறித்து முடிவு எடுக்கமுடியும்.

எனவே, இந்த உயர்வுதான் அமலுக்கு வருமா? அல்லது கருத்துக்கேட்பு கூட்ட முடிவில் குறைக்கப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்பது செப்டம்பர் மாதத்தில்தான் தெரியும்.

Tags:    

மேலும் செய்திகள்