திருவண்ணாமலையில் நடிகர் பாபி சிம்ஹா சாமி தரிசனம்!
நடிகர் பாபி சிம்ஹா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கிரிவலம் செய்து சாமி தரிசனம் செய்தார்.;
திருவண்ணாமலை,
நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு கடந்த சில மாதங்களாகவே திரைப்பட நடிகர்,நடிகைகள், இயக்குனர்கள் தொழிலதிபர்கள் என பலர் வருகை தந்து அண்ணாமலையாரை தரிசித்து 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர். சமீப காலமாகவே, திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் பீட்சா, சூது கவ்வும், இந்தியன் 2, ஜிகர்தண்டா உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களிலும் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமான திரைப்பட நடிகர் பாபி சிம்ஹா நேற்று இரவு விடிய விடிய திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்டார்.
சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து உள்ள அவர் கருப்பு சட்டை கருப்பு வேட்டி அணிந்து கிரிவலப் பாதையில் அஷ்ட லிங்க திருக்கோவில்களிலும் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்து கிரிவலம் மேற்கொண்டார். திரைப்பட நடிகர் கிரிவலம் மேற்கொண்டதை அறிந்த கிரிவலம் பக்தர்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.