பட தயாரிப்பு நிறுவனம் ரூ.10 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும்; ஐகோர்ட்டில் நடிகர் ரவி மோகன் தரப்பு வாதம்

மனு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.;

Update:2025-07-15 18:23 IST

சென்னை ஐகோர்ட்டில் பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் தாக்கல் செய்துள்ள மனுவில், ''எங்களது நிறுவனத்தின் சார்பில் நடிகர் ரவி மோகனை வைத்து 2 படங்கள் தயாரிக்க திட்டமிட்டு, அவருடன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் செய்தோம். முதல் படத்துக்கு ரூ. 15 கோடி ஊதியமாக பேசப்பட்டு, ரூ. 6 கோடி முன்பணமாக கொடுக்கப்பட்டது. ஆனால், ஒப்பந்தத்தை மீறி மற்ற நிறுவனங்கள் படங்களில் அவர் நடித்ததால், கொடுத்த முன்பணத்தை ரவிமோகனிடம் திருப்பிக் கேட்டோம்.

அதற்கு அவர் முன்பணத்தை திருப்பி கொடுப்பதாகவும், ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொள்வதாகவும் கூறினார். ஆனால் இதுவரையில் முன்பணம் ரூ. 6 கோடியை திருப்பித்தரவில்லை. தற்போது ரவிமோகன் தனது சொந்த படத்தயாரிப்பு நிறுவனம் மூலமாக புதிதாக 'ப்ரோ கோட்' என்ற படத்தை தயாரிப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். எனவே, எங்களிடம் வாங்கிய முன்பணம் ரூ. 6 கோடியை வட்டியுடன் திருப்பித்தர ரவிமோகனுக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜரான வக்கீல் விஜயன் சுப்பிரமணியன், ''மனுதாரர் நிறுவனத்திடம் பெற்ற முன்பணம் ரூ. 6 கோடியை ரவி மோகன் தனது சொந்த படத்தயாரிப்புக்காக பயன்படுத்த வாய்ப்புள்ளதால், ரூ. 6 கோடிக்கான உத்தரவாதத்தை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்'' என்று வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் ரவிமோகன் தரப்பு வக்கீல் எஸ். கார்த்திகை பாலன், ''நடிகர் ரவிமோகன் மனுதாரரின் நிறுவனத்திடம் முன்பணமாக ரூ. 6 கோடி பெற்றது உண்மை தான். ஆனால் கால்ஷீட் கொடுத்தும் படப்பிடிப்பு பணிகளைத் தொடங்காததால் ரவிமோகனுக்கு ஏற்பட்ட பொருளாதார ரீதியிலான பாதிப்புகளுக்கு பொறுப்பேற்று நஷ்ட ஈடாக ரூ. 10 கோடி வழங்க மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட வேண்டும்'' என்று வாதிட்டார்.

இதையடுத்து, இந்த வழக்கிற்கு நடிகர் ரவிமோகன் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை வருகிற 23-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்