நடிகை பாலியல் குற்றச்சாட்டு...திலீப் மீதான வழக்கின் பின்னணி
நடிகர் திலீப்பிற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி கோர்ட்டு அவரை விடுதலை செய்தது.;
திருவனந்தபுரம்,
கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு காரில் வீட்டுக்குச் சென்றபோது, நடிகையை ஒரு கும்பல் கடத்தி ஓடும் காரில் பாலியல் தொல்லை கொடுத்து அதனை வீடியோ பதிவு செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.
கேரளாவை உலுக்கிய இந்த குற்றச்சாட்டு தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி, நடிகர் திலீப்பின் தூண்டுதலின் பேரிலேயே இந்த சம்பவம் நடந்ததாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது
நடிகை அளித்த புகாரில் நடிகர் திலீப், நடிகையின் உதவியாளர் சுனில் குமார் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கில் முதல் குற்றவாளியான சுனிலை தூண்டி விட்டதாகவும், அவருக்கு உதவியதாகவும் நடிகர் திலீப் கைதானார்.
நீண்ட கால முன்விரோதம் காரணமாக நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுக்க நடிகர் திலீப் திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. கூட்டு பாலியல் தொல்லை, ஆபாசமாக படம் பிடித்து பகிர்தல் உள்ளிட்ட பிரிவுகளில் திலீப் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.
பாலியல் தொல்லை சதித்திட்டத்தை அரங்கேற்ற சுனிலுக்கு நடிகர் திலீப் ஒன்றரை கோடி கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
அதுமட்டும் இன்றி தன்னைக் கைது செய்த அதிகாரிகளை கொலை செய்ய நடிகர் திலீப் சதித்திட்டம் தீட்டியதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கைதான நடிகர் திலீப் 85 நாட்கள் சிறையில் இருந்தார். சுமார் 8 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் திலீப் உட்பட 8 பேர் மீதான வழக்கில் எர்ணாகுளம் குற்றவியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது
சாட்சியளித்த நடிகர்கள் உள்ளிட்ட பலர் பிறழ் சாட்சியாக மாறியதால் வழக்கில் திருப்பம் ஏற்பட்டது.. வழக்கு தொடர்பாக 280 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் நீதிபதி ஹனி வர்கீஸ் இன்று தீர்ப்பு வழங்கினார். இதில் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.