சிறையில் பொய் சொன்னாரா தர்ஷன்? .. மருத்துவ அறிக்கையில் வெளிவந்த தகவல்- சிகிச்சை நிறுத்தம்
சுப்ரீம் கோர்ட்டு ஜாமீனை ரத்து செய்ததால், நடிகர் தர்ஷன் தற்போது பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.;
பெங்களூரு,
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தர்ஷன். இவர், சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு இந்த கொலை வழக்கில் பல்லாரி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது, தர்ஷன் முதுகுவலியால் அவதிப்பட்டார். இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொள்ள தர்ஷனுக்கு, கர்நாடக ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதன்பேரில், ஜாமீனில் வெளியே வந்த அவர் அறுவை சிகிச்சை எதுவும் செய்யவில்லை. பின்னர் சுப்ரீம் கோர்ட்டு ஜாமீனை ரத்து செய்ததால், தற்போது பரப்பன அக்ரஹாரா சிறையில் தர்ஷன் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறைவாசம் அனுபவிக்கும் அவர் முதுகுவலி இருப்பதாக தெரிவித்தார். இதற்காக சிறை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். குறிப்பாக அவருக்கு பிசியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது. மேலும் சி.வி.ராமன் ஆஸ்பத்திரி டாக்டர்கள் குழுவினர் தர்ஷனுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். அந்த பரிசோதனையில் தர்ஷனுக்கு முதுகுவலி தொடர்பான அறிகுறி கூட இல்லை என்றும், அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும், சிறை அதிகாரிகளிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
இதையடுத்து, சிறையில் நடிகர் தர்ஷனுக்கு அளிக்கப்பட்ட பிசியோதெரபி சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஏற்கனவே முதுகுவலிக்காக தர்ஷன் அறுவை சிகிச்சை செய்யாததால், தவறான மருத்துவ அறிக்கையை வழங்கி ஜாமீன் பெற்று விட்டதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.