15 மாதங்களாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை - நடிகை பாவனா
நடிகை பாவனா கடந்த 2018-ம் ஆண்டு நவீன் என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார்.;
தமிழில் சித்திரம் பேசுதடி, வெயில், கூடல்நகர், வாழ்த்துகள், ஜெயம் கொண்டான், தீபாவளி, அசல் போன்ற பல படங்களில் நடித்தவர் பாவனா. மலையாளத்திலும் ஏராளமான படங்கள் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு நவீன் என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணத்துக்கு பிறகும் பிசியாக நடித்து வருகிறார். 5 வருட இடைவெளிக்கு பிறகு 2023-ம் ஆண்டு வெளியான 'என்டிக்காக்கக்கொரு பிரேமண்டார்ன்' என்ற படத்தின் மூலம் மீண்டும் மலையாள திரையுலகத்துக்கு திரும்பினார் நடிகை பாவனா.
இந்நிலையில் பாவனா “எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முயற்சிப்பது எனக்கு ஒரு கெட்ட பழக்கம். நான் எப்போதும் சிரித்துக் கொண்டே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் இருக்கிறது. நான் பிரச்சினைகளை சந்திக்கும் போது கூட கேமரா முன் இருக்கும் போது மகிழ்ச்சியாக இருக்க அதிகமாக முயற்சி செய்கிறேன். நான் 15 மாதங்களாக என் பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்தேன். நான் மக்களை பார்க்க தயாராக இல்லை. என் குடும்பத்தினரையும் நெருங்கிய நண்பர்களையும் மட்டுமே பார்த்தேன். சிரிக்க வேண்டுமா.வேண்டாமா? என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் எல்லா நேரங்களிலும் அந்த நிலையில் இருக்க முடியாது. எனது படம் வெளியாக போகிறது. இந்த படத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.” என்று கூறினார்.