நடிகர் உபேந்திரா-மனைவியின் செல்போன்களை முடக்கி பண மோசடி- பீகார் பட்டதாரி கைது

நடிகர் உபேந்திரா, அவரது மனைவியின் செல்போன்களை முடக்கி ரூ.1½ லட்சத்தை மோசடி செய்த பீகாரை சேர்ந்த பட்டதாரி கைது செய்யப்பட்டு உள்ளார்.;

Update:2025-11-13 08:21 IST

சதாசிவநகர்,

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் உபேந்திரா. இவரது மனைவி பிரியங்கா. இவரும் நடிகை ஆவார். இவர், தமிழில் நடிகர் அஜீத்குமாருடன் சேர்ந்து ராஜா என்ற படத்திலும், உபேந்திரா நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான கூலி படத்திலும் நடித்திருந்தனர். பெங்களூரு சதாசிவநகரில் உபேந்திரா தனது மனைவி பிரியங்கா மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.

இதற்கிடையில், கடந்த செப்டம்பர் மாதம் 15-ந் தேதி பிரியங்காவை தொடர்பு கொண்ட மர்மநபர், ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருளை வழங்க சரியான முகவரி இல்லை, எனது செல்போனுக்கு அழைக்கும்படி கூறி அந்த எண்ணை மர்மநபர் அனுப்பினார். அதன்படி, அந்த செல்போன் எண்ணுக்கு பிரியங்கா தொடர்பு கொண்டார். அதன்பிறகு, பிரியங்கா மற்றும் நடிகர் உபேந்திராவின் செல்போன்கள் முடக்கப்பட்டது.

அவர்களது செல்போன்களை பயன்படுத்தி மர்மநபர்கள் பணம் பறிக்கும் முயற்சியில் இறங்கினார்கள். அதாவது நடிகர் உபேந்திரா, அவரது மனைவி கேட்பது போல், அவசர தேவைக்காக பணம் அனுப்பும்படி, அவரது மகன் மற்றும் நண்பர்களுக்கு மர்மநபர்கள் தகவல் அனுப்பினார்கள். இதையடுத்து, உபேந்திராவின் மகனும் ரூ.55 ஆயிரத்தை அனுப்பி வைத்திருந்தார். அதுபோல் சில நண்பர்களும் பணம் அனுப்பினர். இதுபோல், ஒட்டு மொத்தமாக உபேந்திரா, பிரியங்காவின் செல்போன்களை முடக்கி ரூ.1.65 லட்சத்தை வாங்கி மோசடியில் ஈடுபட்டு இருந்தனர். இதுகுறித்து சதாசிவநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். சைபர் கிரைம் போலீசாரும் மர்மநபர்களை பிடிக்க தீவிரம் காட்டினார்கள்.

இந்த நிலையில், நடிகர் உபேந்திரா, அவரது மனைவியின் செல்போன்களை முடக்கி பணம் மோசடி செய்த வாலிபரை சதாசிவநகர் போலீசார், டெல்லி அருகே நொய்டாவில் வைத்து கைது செய்துள்ளனர். அவரை பெங்களூருவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர், பீகார் மாநிலம் தசரத்பூர் கிராமத்தை சேர்ந்த விகாஷ்குமார் (வயது 25) என்று தெரிந்தது.

இவர், பி.காம் பட்டதாரி ஆவார். உபேந்திரா, அவரது மனைவியின் செல்போன்களை முடக்கி பணம் மோசடி செய்ததையும், மேலும் பலரிடம் இதுபோன்று பணம் மோசடி செய்திருப்பதையும் அவர் ஒப்புக் கொண்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்