‘படையாண்ட மாவீரா' படத்துக்கு தடை கேட்டு வழக்கு- ஐகோர்ட்டு நோட்டீஸ்

‘படையாண்ட மாவீரா' படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்று சந்தன கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி மனு தாக்கல் செய்துள்ளார்.;

Update:2025-09-20 06:23 IST

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் சந்தன கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘படையாண்ட மாவீரா'' என்ற படத்தின் போஸ்டர்கள் தமிழ்நாடு முழுவதும் ஒட்டப்பட்டுளளது. அதில் எனது கணவர் வீரப்பனை போல மீசை வைத்த நபர் உள்ளார். அதை பார்க்கும்போது எனது கணவரைத்தான் அந்த புகைப்பட்டம் சித்தரிக்கிறது. இதற்கு என்னிடம் சட்டப்படி அனுமதி பெற்று இருக்கவேண்டும்.

எந்த ஒரு அனுமதியும் பெறாமல் என் கணவரை மையமாக வைத்து இந்த படம் தயாரிக்கப்பட்டு இருக்கும் என்று கருதுகிறோம். இதனால் எனது கணவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த படத்தை வி.கே.புரொடெக்சன் நிறுவனம் தயாரித்துள்ளது. எனவே இந்த படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. முத்துலட்சுமி தரப்பில் வக்கீல் சுவேதா ஸ்ரீதர் ஆஜராகினார். அப்போது நீதிபதி, இந்த வழக்கிற்கு தயாரிப்பு நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 26-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்