"மண்டாடி" படத்தில் என் கேரக்டர் சுமாரா இருந்தாலும் நடிக்க முடிவு பண்ணிட்டேன்- சத்யராஜ்

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிக்கும் ‘மண்டாடி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.;

Update:2025-04-20 21:54 IST

சென்னை,

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தவர் சூரி. பின்னர் வெற்றி மாறன் இயக்கிய 'விடுதலை பாகம் 1' படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து, 'கருடன், கொட்டுக்காளி' ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். இதற்கிடையில் இவர் விலங்கு வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மாமன்' படத்தில் நடித்துள்ளார். ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ள இப்படம் வருகிற மே 16ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இதனையடுத்து, மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி தனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் சூரியுடன் இணைந்து சத்யராஜ், மகிமா நம்பியார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.இப்படத்தை எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்போ நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். மண்டாடி என்பது கடல் நீர்வாடு பற்றிய அழ்ந்த அறிவு உள்ளவர், நீர் ஓட்டத்தை வைத்து மீன்பிடிக்கும் உத்தி அறிந்தவர் என்றும் கூறப்படுகிறது. இயக்குநர் மதிமாறன் புகழேந்தி ஜி.வி.பிரகாஷ் நடித்த செல்பி படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது

இந்நிலையில் இப்படம் குறித்து சில தகவல்களை நடிகர் சத்யராஜ் பகிர்ந்துள்ளார். வீடியோவில் அவர், "மண்டாடி படம் தொடர்பாக இயக்குனர் மதிமாறன் என் வீட்டிற்கு வந்தார். அந்த கதையை சொல்வதற்கு முன்பாக ஒரு மேக்கிங் வீடியோவை காட்டினார். அதை பார்த்து நான் பிரமித்து விட்டேன். இந்த மாதிரி ஒரு படகுப்போட்டி எங்கேயுமே பார்த்ததில்லை கேள்விப்பட்டதில்லை என்று கேட்டேன். அதற்கு அவர் ராமேஸ்வரம் பகுதியில் நடக்கிறது என்று சொன்னார். ஒரிஜினல் பந்தயத்தை எடுத்து இருக்கிறார்கள். இதை எப்படி சினிமாவாக எடுக்க முடியும் என யோசித்தேன். அதேசமயம் மனதிற்குள் என் கேரக்டர் சுமாராக இருந்தாலும் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். அப்புறம் அவர் கதை சொன்னார். கதை கதையும் நன்றாக இருந்தது. என் கேரக்டரும் நன்றாக இருந்தது. எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

மதிமாறன் இதை ஆராய்ச்சி பண்ணி சொல்றாரு. அதுதான் முக்கியம். அவர் மிகவும் ஆழமாக இறங்கி இருக்கிறார். இந்த கதையை எடுக்க மிகவும் செலவாகும். அதற்காக எல்ரெட் குமாருக்கும், வெற்றிமாறனுக்கும் ஹாட்ஸ் ஆப். நல்ல ஒரு கதாநாயகனாக மாறியுள்ள என் அன்பு தம்பி சூரியின் கெட்டப் பிரமாதமாக இருக்கிறது. சூரி எந்த அளவிற்கு இறங்கி வேலை செய்வாரே என்பதை பல படங்களில் பார்த்திருக்கிறோம். அடுத்தது இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் மிகப்பெரிய ஆட்கள். இந்த படத்தில் நடிக்கவும் இந்த படத்தின் ரிலீஸுக்காகவும் ஒரு சினிமா ரசிகனாக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றேன்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்