கர்நாடகாவில் கமல் படத்தை திரையிட்டால் தியேட்டரை கொளுத்துவோம் - கன்னட அமைப்பு மிரட்டல்
கன்னட மொழியை அவமதித்த கமல் நடித்துள்ள ‘தக் லைப்’ திரைப்படத்தை, கர்நாடகாவில் திரையிட்டால் திரையரங்குகளுக்கு தீ வைப்போம் என கன்னட ரக்ஷனா வேதிகே மிரட்டல் விடுத்துள்ளது.;
பெங்களூரு,
நடிகர் கமல்ஹாசன், முன்னணி இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் 'தக் லைப்'என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், தமிழில் இருந்து கன்னடம் பிறந்ததாக கூறினார். இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு கர்நாடகத்தில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. மேலும் கன்னட அமைப்பினர், எழுத்தாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் கமல்ஹாசனை கண்டித்தும் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர் தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், கன்னட மொழி பற்றி பேசிய கமல்ஹாசனின் 'தக் லைப்' திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கன்னட அமைப்புகளிடமிருந்து வலியுறுத்தல்கள் வலுக்க, அதுதொடர்பாக கடந்த வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்திய கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, கமல்ஹாசன் மே 30-ம் தேதிக்குள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவில்லை எனில், அவரது தக் லைப் திரைப்படத்திற்கு தடை விதிக்கப்படும் என்று எச்சரித்திருந்தது. ஆனால் கமல்ஹாசன் தான் தவறாக எதுவும் கூறவில்லை என்றும், அன்பு மன்னிப்பு கேட்காது என்றும் கூறியுள்ளார். தவறு செய்யாமல் மன்னிப்பு கேட்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
தக் லைப் திரைப்படத்திற்கு கர்நாடகாவில் தடை விதிப்பதாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தெரிவித்தது. இதுதொடர்பாக பேசிய கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் பிரதிநிதி கோவிந்து, கன்னட மக்களின் மனதை காயப்படுத்தியதற்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவில்லை. அதனால் கர்நாடக ரக்ஷன வேதிகே என்ன சொல்கிறதோ அதைக் கேட்டுத்தான் நாங்கள் செயல்பட வேண்டும். எனவே கமல்ஹாசனின் தக் லைப் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட தடை விதிக்கப்படுகிறது என்றார்.
இந்நிலையில், திரையிடக் கூடாது மீறி திரையிட்டால் தியேட்டரை கொளுத்துவோம் என்று கன்னட ரக்ஷனா வேதிகே அமைப்பின் தலைவர் நாராயண கவுடா மிரட்டல் விடுத்துள்ளார். "தன் பேச்சுக்கு நடிகர் கமல் மன்னிப்பு கேட்காமல், முரண்டு பிடிக்கிறார். இனியும் அவர் இதே மனப்போக்கை தொடர்ந்தால், கர்நாடகாவின் எந்த திரையரங்குகளிலும், அவர் நடித்துள்ள 'தக் லைப்' திரைப்படத்தை திரையிடக் கூடாது. இதற்கு நாங்கள் வாய்ப்பளிக்கமாட்டோம். ஒருவேளை திரையிட்டால், அந்த திரையரங்கிற்கு தீ வைப்போம். இதற்காக எங்கள் மீது வழக்குப் பதிவு செய்து கொள்ளட்டும். எங்களுக்கு கவலை இல்லை. கமல், தமிழ் திரையுலகில் பெரிய நடிகர். அவர் மீது எங்களுக்கு அதிகமான மதிப்பு இருந்தது. ஆனால், தமிழர்களை கவர, கன்னடத்துக்கு எதிராக பேசியுள்ளார். மற்ற மொழிகளைப் பற்றி பேசும்போது, குறைந்தபட்ச அறிவு இருக்க வேண்டும். இவர் நடிக்கும் திரைப்படத்தை கர்நாடக மாநிலத்தில் திரையிடக் கூடாது" என நாராயண கவுடா தெரிவித்துள்ளார்.