8 கோடி பார்வைகளை கடந்த “ஜன நாயகன்” டிரெய்லர்
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் வரும் 9-ம் தேதி திரைக்கு வர உள்ளது.;
சென்னை,
இயக்குநர் எச்.வினோத். விஜய்யை வைத்து ‘ஜனநாயகன்’ படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தின் எடிட்டிங் பணிகள் வரை முடிவடைந்து பொங்கல் வெளியீடாக வரும் 9-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதில், நாயகியாக பூஜா ஹெக்டேவும் முக்கிய கதாபாத்திரத்தில் மமிதா பைஜூவும் நடித்துள்ளனர். தீவிர அரசியலில் களமிறங்கி இருக்கும் விஜய் நடிக்கும் கடைசி படம் இதுதான் என்று கூறப்படுகிறது. இதனால் படத்துக்கு சினிமா தாண்டி அரசியல் களத்திலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கமான விஜய் படம் போன்று இல்லாமல், இந்த படத்தில் அரசியல் நெடி அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் மைதானத்தில் சமீபத்தில் நடைபெற்றது. விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்திற்கான அனைத்து பணிகளையும் முடித்து கடந்த மாதம் தணிக்கைக்கு அனுப்பிய படக்குழு இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று மாலை வெளியான ‘ஜனநாயகன்’ டிரெய்லர் தற்போது வரை யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 83 மில்லியன் பார்வைகளை 24 மணி நேரத்தில் கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. டிரெய்லரில் விஜய்யின் அரசியல் வருகை குறித்த மறைமுகமான வசனங்கள் இடம்பெற்றுள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.