யுனிசெப் தூதரான நடிகை கீர்த்தி சுரேஷ்

யுனிசெப்பின் குழந்தைகள் நலனுக்கான தூதராக கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டு உள்ளார்.;

Update:2025-11-15 18:15 IST

தயாரிப்பாளரும், நடிகருமான சுரேஷ் மற்றும் நடிகை மேனகா தம்பதியினரின் இளைய மகளான கீர்த்திசுரேஷ். மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். 2013-ம் ஆண்டு பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான கீதாஞ்சலி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

ரஜினிமுருகன், ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், மாமன்னன், சைரன் போன்ற படங்களில் நடித்து உள்ளார். தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் வெளியான ரகு தாத்தா படத்தில் இவரது காதாபாத்திரம் மிகுந்த வரவேற்பை பெற்றது. நடிகை சாவித்ரி வாழ்க்கையை மையமாக கொண்டு உருவான நடிகையர் திலகம் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது கிடைத்தது. இவர் பாலிவுட்டில் வருண் தவானுடன் இணைந்து 'பேபி ஜான்' என்ற படத்தில் நடித்திருந்தார். இவர் நடித்த ‘ரிவால்வர் ரீட்டா’ படம் வரும் 28ம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும், விஜய் தேவரகொண்டாவுடன் ‘தோட்டம்’, மிஷ்கினுடன் ஒரு படம் என நடித்து வருகிறார்.

இந்நிலையில், யுனிசெபின் குழந்தைகள் நலனுக்கான தூதராக கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து தனது சமூக வலை தளப் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், “இந்தியாவில் குழந்தைகளுக்கான யுனிசெப் தூதராக இணைவதில் பெருமைப்படுகிறேன். ஒவ்வொரு குழந்தையும் ஆரோக்கியமாக வளரவும், கற்றுக்கொள்ளவும், கனவு காணவும் தகுதியானது. யுனிசெப் அதை நனவாக்க கடந்த 76 ஆண்டுகளாக, உழைத்து வருகிறது. அந்தப் பணியில் ஒரு பகுதியாக நானும் இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இக்குழுவில் ஏற்கெனவே இடம் பெற்றுள்ள, அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர், பிரியங்கா சோப்ரா, ஆயுஷ்மண் குர் ரானா, கரீனா கபூர் கான் ஆகியோருடன் கீர்த்தி சுரேஷும் இணைந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்