"தக் லைப்" படத்தில் குஷ்பு மகள்! திரையில் மகள் பெயரை பார்த்து குஷ்பு நெகிழ்ச்சி
‘தக் லைப்’ படத்தில் குஷ்புவின் மகள் அனந்திதா பணியாற்றியிருக்கும் நிலையில் குஷ்பு மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது.இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், சிலம்பரசன் நடிப்பில் உருவான 'தக் லைப்' திரைப்படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. இப்படம் இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 52 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் 80 மற்றும் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் குஷ்பு. இவர் பாலிவுட் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் தமிழில் 'வருஷம் 16' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி முன்னனி நடிகையாக திகழ்ந்தார். அதனைதொடர்ந்து இயக்குனர் சுந்தர்.சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு, இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் தற்போது நடிப்பது மட்டுமின்றி அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் இந்த படத்தில் மணிரத்னத்திற்கு உதவி இயக்குநர்களாக பலர் பணியாற்றியிருக்கிறார்கள். அதில் குஷ்புவின் இளைய மகள் அனந்திதாவும் பணியாற்றியுள்ளாராம். இதுகுறித்து குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் " மணிரத்னம் சார் படத்தில் என் மகளின் பெயரும் வந்ததை பார்த்து ஒரு பெற்றோராக நான் பெருமிதம் அடைகிறேன். மகளுக்கு முழங்காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக மணிரத்னம் படத்தில் கொஞ்ச காலம்தான் பணியாற்ற முடிந்தது. ஆனால் அந்த படத்தில் பணியாற்றியபோது மணிரத்னத்திடம் இருந்து என் மகள் நிறைய விஷயங்களையும் தொழில் நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டார். இது எனது மகள் மனதில் வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும். இந்த அனுபவம் உண்மையிலேயே அற்புதமானது. கொஞ்ச காலம் பணியாற்றியிருந்தாலும் என் மகளின் பெயரை மறக்காமல் இடம் பெறச் செய்தமைக்கு நன்றி மணி சார்" என கூறி, டைட்டிலில் மகளின் பெயர் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து குஷ்புவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். உங்கள் மகள் இயக்கத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என குஷ்புவிடம் கோரிக்கை விடுத்தும் வருகிறார்கள்.