“லெஜெண்ட் ” சரவணன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு

லெஜெண்ட் சரவணன் மாற்று திறமைசாலிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.;

Update:2025-09-05 14:47 IST

தொழிலதிபரான லெஜண்ட் சரவணன் தன்னுடைய கடையின் விளம்பரத்தில் அவரே நடித்தார். இந்த விளம்பர வீடியோக்களில் கலர் கலராக உடை அணிந்து கொண்டு, நடிகை தமன்னா, ஹன்சிகா மோத்வானி என பல முன்னணி நடிகைகளுடன் நடனம் ஆடியிருந்தார். இதற்கு இணையத்தில் மிகப்பெரிய அளவில் விமர்சனம் வந்தபோதும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து தன்னுடைய கடையின் விளம்பரத்திற்கு இவரே மாடலாக நடித்து வந்தார்.

இதை தொடர்ந்து இயக்குனர்கள் ஜெர்ரி & ஜெடி இயக்கத்தில் ‘தி லெஜண்ட்’ படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியானது. இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றன.

தி லெஜண்ட் படத்தை தொடர்ந்து, எதிர்நீச்சல், கொடி, பட்டாசு, கருடன் படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கமிட்டாகி நடித்து வந்தார். இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா, நடிகர் சாம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இதில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக இருவர் உள்ளம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பாயல் ராஜ்புத் நாயகியாக நடித்து வருகிறார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற்றது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

 

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக லெஜெண்ட் சரவணன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். லெஜெண்ட் சரவணன் தனது படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், மாற்று திறமைசாலிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதுகுறித்தும் லெஜெண்ட் சரவணன் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில்,“மாற்று திறமைசாலிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய தருணம்” என்று குறிப்பிட்டிருந்தார். மாற்றுத்திறனாளிகளை மாற்றுத்திறமைசாளிகள் என்று குறிப்பிட்ட லெஜெண்ட் சரவணனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்