'லியோ'-க்கு பிறகு 2 மடங்கான சம்பளம்...'கூலி' படத்திற்கு லோகேஷ் வாங்கியது எவ்வளவு?

''கூலி'' படத்தின் முதல் பாடல் முதல் இதுவரை வெளியிடப்பட்ட அனைத்தும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றன;

Update:2025-07-15 13:00 IST

சென்னை,

லோகேஷ் கனகராஜின் ''கூலி'' ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் படம். படத்தின் முதல் பாடல் முதல் இதுவரை வெளியிடப்பட்ட அனைத்தும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றன. இப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி திரைக்கு வருகிறது. 

இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இப்படத்திற்கு ரூ.50 கோடி சம்பளம் வாங்கியதாக தெரிவித்திருக்கிறார்.

அவர் கூறுகையில், ''லியோ திரைப்படம் ரூ. 600 கோடி வசூல் செய்தது. எனவே இப்போது நான் முன்பைவிட இரண்டு மடங்கு அதிகமாக சம்பளம் பெறுகிறேன். கூலி படத்திற்கு எனக்கு ரூ. 50 கோடி சம்பளம் வழங்கப்பட்டது.

தற்போது ''கூலி'' ரூ.1,000 கோடி சம்பாதிக்கும் என்று என்னால் உத்தரவாதம் அளிக்க முடியாது, ஆனால் படத்தைப் பார்க்க மக்கள் செலுத்தும் ரூ. 150 அல்லது ரூ. 200 டிக்கெட் விலைக்கு உத்தரவாதம் அளிக்க முடியும். அது என்னுடைய பொறுப்பு. ஒரு படம் வெளியாகும் முன்பே இவ்வளவு வசூல் செய்யும் என்று கணிக்க யாராலும் முடியாது.

நான் கல்லூரியில் படிக்கும்போது, என் நண்பர்களுடன் திரைப்படங்களைப் பற்றி விவாதிக்கும்போது, 50 நாட்களை தாண்டியதா?, 100 நாட்களை தாண்டியதா? என்பதைப் பற்றி மட்டுமே பேசினோம். யாரும் அது எவ்வளவு வசூல் செய்தது என்பதை பற்றி கவலைப்பட்டதில்லை. ரசிகர்கள் இப்போது அதை செய்கிறார்கள். அது நல்லதல்ல. இந்த கலாசாரம் விரைவில் மாறும் என்று நம்புகிறேன்'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்