கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு ரூ.10 கோடி பரிசுத்தொகை வழங்க வேண்டும்- மன்சூர் அலிகான் வேண்டுகோள்
கார்த்திகாவிற்கு தமிழக அரசு ரூ.10 கோடி பரிசுத்தொகையும், வீடும் வழங்க வேண்டும் என நடிகர் மன்சூர் அலிகான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.;
சென்னை,
பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி தங்கம் வென்று அசத்தியது. இதில் சென்னை - கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகா ‘கில்லி’யாக செயல்பட்டு அணிக்கு வெற்றி தேடி தந்தார். இந்தத் தொடரில் அவர் இந்திய அணியின் துணை கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய இளையோர் போட்டியின் இறுதியில், ஈரான் அணியை 75-21 என்ற கணக்கில் வீழ்த்தி அசத்தியது இந்தியா. இந்த அசாத்திய வெற்றியை கட்டமைத்தவர்களில் ஒருவராக கார்த்திகாவும் உள்ளார். தங்கம் வென்ற கார்த்திகாவுக்கு ரூ 25 லட்சம் ஊக்கத்தொகையாக தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கினார்.
இதனை தொடர்ந்து, கபடி வீராங்கனை கார்த்திகாவை நேரில் சந்தித்து அரசியல் கட்சியினரும், திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு தமிழக அரசு ரூ.10 கோடி பரிசுத்தொகையும், வீடும் வழங்க வேண்டும் என நடிகர் மன்சூர் அலிகான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.