விஜய் படத்தில் என் கதாபாத்திரம் திருப்திகரமாக இல்லை - நடிகை சம்யுக்தா
ஆனந்தராஜ், பிக் பாஸ் சம்யுக்தா நடிக்கும் ‘மெட்ராஸ் மாபியா கம்பெனி’ படம் வரும் 14ம் தேதி வெளியாகிறது.;
ரியாலிட்டி ஷோ ஒன்றில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர், சம்யுக்தா. இவர் மாடலிங் மற்றும் நடிப்புத் துறையில் வளர்ந்து வருகிறார். தமிழில் ‘துக்ளக் தர்பார்’, ‘காரி’, ‘வாரிசு’ படங்களில் நடித்திருந்த இவர், தற்போது ‘மதராஸ் மாபியா கம்பெனி’ என்ற படத்தில் போலீஸ் வேடத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இப்படம் வரும் 14ம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில் சம்யுக்தா அளித்த பேட்டி ஒன்றில், “சினிமா என்னுடைய குடும்பத்திற்கு புதிது. குடும்பத்தினர் ‘வேண்டாம்' என்று சொன்னாலும், சினிமாவின் மீதான ஈர்ப்பால் அதில் நுழைந்து விட்டேன். சினிமாவில் எனக்கு நல்ல அனுபவங்களும், கெட்ட அனுபவங்களும் இருக்கின்றன.‘வாரிசு’ படத்தில் நடித்தது பற்றி பலரும் கேட்கிறார்கள். அந்த கதாபாத்திரம் எனக்கு திருப்திகரமாக இல்லை என்றாலும், ஒரு பெரிய நடிகரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பை எப்படி விட்டுவிட முடியும். அதனால்தான் அந்தப் படத்தை ஒப்புக்கொண்டு நடித்தேன். அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.
சமூக வலைதளத்தில் வரும் பதிவுகள் சில நேரம் மன உளைச்சலைத் தரும். உங்களின் நடிப்பு பிடிக்கவில்லை' என்று சொல்பவர்களை ‘சரி’ என்று ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் தவறான வார்த்தைகளை, நான் எப்படிப்பட்டவள் என்று அவர்கள் தவறான எண்ணத்தில் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. சமூக வலைதளத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டு, தடுத்து நிறுத்த வேண்டும்” என்றார்.