தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய சிம்பு: வெளியான 50-வது பட அறிவிப்பு
சொந்தமாக ‘அட்மேன் சினி ஆர்ட்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடிகர் சிம்பு தொடங்கியுள்ளார்.;
சென்னை,
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவர் நடிப்பில் வெளியான "பத்து தல" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் சிம்பு இயக்குனர் மணி ரத்னம் இயக்கியுள்ள "தக் லைப்" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இவர் அடுத்தாக, 'ஓ மை கடவுளே', 'டிராகன்' போன்ற படங்களை இயக்கி உள்ள இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படம் இன்றைய கால இளைஞர்களின் காதலைப் பற்றி பேசும் படமாக உருவாக உள்ளது. அதனை தொடர்ந்து 'பார்க்கிங்' பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் 'எஸ்டிஆர் 49' என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த சூழலில், சொந்தமாக 'அட்மேன் சினி ஆர்ட்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள நடிகர் சிம்பு, 50-வது பட அறிவிப்பை தனது பிறந்தநாளான இன்று வெளியிட்டுள்ளார். அதன்படி இப்படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். 'அட்மேன் சினி ஆர்ட்ஸ்' நிறுவனத்தின் கீழ் சிம்பு தயாரிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது.