அடுத்த தலைமுறை இயக்குநர்கள் அஸ்வத் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதன் போல இருக்கணும் - "டிராகன்" தயாரிப்பாளர்

இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் வெளியான 'டிராகன்' திரைப்படம் 100 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்துள்ளது.;

Update:2025-06-29 18:42 IST

சென்னை,

தமிழ் சினிமாவில் 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதன் பிறகு, 'லவ் டுடே' என்ற படத்தை இயக்கி நடித்தார். அப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான 'டிராகன்' படம் சுமார் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கயாடு லோஹர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் நடித்து வருகிறார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் 'டூட்' படத்தில் மமிதா பைஜு நாயகியாக நடித்து வருகிறார். புதிய படம் தொடர்பாக பிரதீப் ரங்கநாதனை அணுகியதாக இயக்குனர் பிரேம்குமார் தெரிவித்திருந்தார்.

'டிராகன்' படத்தின் 100வது நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதீப் ரங்கநாதன், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் கலந்து கொண்டனர். படக்குழுவினர் அனைவருக்கும் சிறப்பு நினைவுப் பரிசு ஒன்று வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் அர்ச்சனா கல்பாத்தி பேசுகையில், "டிராகன் மாதிரி அர்த்தமுள்ள, அழகான, கமர்ஷியல் திரைப்படம் வருவது ரொம்பக் கடினம். அப்படியான படத்தைக் கொடுத்த அஸ்வத் மாரிமுத்துவுக்கும், பிரதீப்புக்கும் நன்றி. அடுத்த தலைமுறை இயக்குநர்கள் அஸ்வத் மாரிமுத்து போலவும், பிரதீப் ரங்கநாதன் போலவும் இருக்க வேண்டும். இங்கு கதைதான் ராஜா. நல்ல கதைகளைச் சொன்னால், உலகமெங்கும் இருக்கும் தமிழ் மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள். இளம் இயக்குநர்களுக்கு ரைட்டிங் ரொம்பவே முக்கியம்," என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்