நடிகர் வீட்டில் புகுந்து கைவரிசை காட்டிய திருடன் கைது
அந்த திருடனிடமிருந்து ரூ.1 கோடியே 37 லட்சம் மதிப்புள்ள நகை மீட்கப்பட்டுள்ளது.;
மும்பை,
மும்பை அந்தேரி மேற்கில் உள்ள லோகண்ட்வாலா பகுதியில் பிரபல நடிகர் அபிமன்யு சிங்கின் பங்களா வீடு உள்ளது. சமீபத்தில் இந்த பங்களாவின் குளியலறை ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்த திருடன், அங்கிருந்த பாதுகாப்பு பெட்டியை அப்படியே தூக்கி சென்றார். அந்தப்பெட்டியில் தங்கம், வைரம், வெள்ளி நகைகள் மற்றும் ரொக்க பணம் வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக நடிகரின் 82 வயது தாயார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மும்பை போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் மனோஜ் மோகன் ரத்தோடு (40) என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மனோஜ் மோகன் ரத்தோடு ஒரு தொடர் குற்றவாளி ஆவார். இவர் மீது மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 14 திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
அவரிடம் இருந்து ரூ.1 கோடியே 37 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் திருட்டு பொருட்களை போலீசார் மீட்டனர். இது தொடர்பாக அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.