ரஜினிகாந்த், கமல்ஹாசன், அமிதாப் பச்சன் இணைந்து நடித்த ஒரே படம்...எது தெரியுமா?
சமீபத்தில் வெளியான ''வேட்டையன்'' படத்தில் அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து நடித்தனர்.;
சென்னை,
இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து ஒரு படத்தில் நடித்திருக்கிறார்கள்.
அது 1985-ம் ஆண்டில் வெளியான அதிரடி திரைப்படமான ''கெராப்டார்'' ஆகும். பிரயாக் ராஜ் இயக்கிய இந்த படத்தில் மூன்று ஜாம்பவான் நடிகர்களும் முதல் முறையாக இணைந்து நடித்தனர்.
அமிதாப் பச்சன் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் இப்படத்தில் சகோதரர்களாக நடித்தனர். ரஜினிகாந்த் அமிதாப் பச்சனின் நண்பர் இன்ஸ்பெக்டர் ஹுசைனாக நடித்தார். இது ஒரு சிறப்பு வேடமாகும்.
ரஜினிகாந்த் சிறிய வேடத்தில் நடித்திருந்தாலும், அவரது கதாபாத்திரம் படத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்படம் 1985-ம் ஆண்டில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றானது. இப்படத்தை எஸ். ராமநாதன் தயாரித்தார்.
பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற போதிலும், அதன்பிறகு வேறு எந்த படத்திலும் இந்த மூவரும் நடிக்கவில்லை.
ஹம், அந்தா கானூன் மற்றும் வேட்டையன் போன்ற படங்களில் அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து நடித்தனர். ''கல்கி 2898 ஏடி'' படத்தில் அமிதாப் பச்சன் மற்றும் கமல்ஹாசன் நடித்திருந்தனர்.