"வெயில்" படத்தில் அப்படி செய்ததற்காக மன்னிப்பு கேட்ட வசந்தபாலன்
ரஞ்சித் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு தலித் பற்றியப் பார்வை , அதிகாரம் பற்றியப் பார்வை தமிழ் சினிமாவில் வேறு ஒன்றாக இருந்தது என்று இயக்குனர் வசந்தபாலன் கூறியுள்ளார்.;
சென்னை,
பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் 'பி.கே.ரோஸி திரைப்பட விழா' ஆண்டுதோறும் நடந்து வருகிறது. விழாவின் நிறைவு நாளில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், வசந்த பாலன், லெனின் பாரதி, பிரம்மா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் வசந்த பாலன் பேசுகையில் தனது வெயில் படத்தை குறிப்பிட்டு பகிரங்க மன்னிப்பு கேட்டார். அவர் பேசியதாவது, " ரஞ்சித் வருவதற்கு முன்பு சாதி பற்றிய பார்வை தமிழ் சினிமாவில் வேறு ஒன்றாக இருந்தது. வெயில் படத்தில் பன்றி மேய்ப்பவரை வில்லனாக சித்தரித்ததற்கு இந்த மேடையில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கத் தயாராக இருக்கிறேன். ரஞ்சித் தனது கமர்ஷியல் படங்களில் நாம் சித்தரிக்கிற ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு தலித்தாக சிறுபான்மையினராக இருந்துவிடக் கூடாது என்பதில் கூடுதல் கவனத்துடன் கையாண்டது முக்கியமான விஷயம். அது இப்போது மொத்த தமிழ் சினிமாவை மாற்றியிருக்கிறது.
அவர் ரஜினி படம் பண்ணி பெரிய காசு கிடைத்த பிறகு என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம். ஆனால் நூலகம் தொடங்கினார். இசைக்கச்சேரி, திரைப்பட விழா போன்றவற்றை நடத்துகிறார். பார்ப்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது. அரசியலை மிகக்கவனமாகச் சொல்ல வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது" என்று பேசியிருக்கிறார்.
வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன், ஜெயில், அநீதி உள்ளிட்ட பல படங்களை வசந்தபாலன் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.