நடிகை சிவஜோதியை தரிசனத்திற்கு அனுமதிக்க மாட்டோம்- திருப்பதி தேவஸ்தானம்

நடிகை சிவஜோதியை தரிசனத்துக்கு அனுமதிக்க மாட்டோம் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.;

Update:2025-11-28 03:45 IST

திருப்பதி,

ஆந்திர மாநில டி.வி. சேனலில் பிரபல தொகுப்பாளினியாக இருப்பவர் சிவஜோதி. இவர் சில நாட்களுக்கு முன்பு தனது சகோதரர் சோனுவுடன் திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வந்தார். அப்போது ரூ.10 ஆயிரம் தரிசன டிக்கெட் வாங்கினார். எனினும் தரிசனத்துக்கு நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிவஜோதி மற்றும் அவரது சகோதரர் சோனு ஆகியோர் ரூ,10 ஆயிரம் தரிசன டிக்கெட் வாங்கியும் தரிசனத்துக்காக மணிக்கணக்கில் காத்திருந்தோம். பிரசாதம் வாங்க நீண்ட நேரம் பிச்சைக்காரர்களை போல் காத்திருந்தோம் என வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளமான ‘வாட்ஸ்அப்’ மற்றும் ‘இன்ஸ்டா கிராம்’-ல் அவதூறு பதிவு செய்தனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் திருப்பதி தேவஸ்தானத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தேவஸ்தான அதிகாரிகள் சிவஜோதியின் ஆதார் கார்டை இனி திருப்பதி தேவஸ்தானத்தில் பதிவு செய்வதை தவிர்க்கும் வகையில் முடக்கினர். மேலும் வருங்காலங்களில் சிவஜோதி ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்க மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சிவஜோதி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘தெரிந்தோ தெரியாமலோ என்னுடைய வாயில் இருந்து வார்த்தைகள் தவறாக வந்து விட்டது. என்னுடைய வீட்டில் ஏழுமலையான் படம் உள்ளது. ஏழுமலையானை குலதெய்வமாக கருதுகிறேன். என் வயிற்றில் வளரும் குழந்தையை கூட ஏழுமலையானாக கருதுகிறேன். எங்கள் குடும்பத்தில் அனைவரும் அனைத்து தெய்வங்களையும் வணங்கி வருகிறோம். என் மீதான தவறுக்கு மன்னித்து விடுங்கள்’’ என பதிவு செய்துள்ளார். சிவஜோதி கன்னட ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்