“மகுடம்” படத்தின் இயக்குநராக பொறுப்பேற்றது ஏன்? - விஷால் விளக்கம்

தயாரிப்பாளர் நம்பிக்கையை காக்கும் பொருட்டு இப்போது நான் இயக்குநராக பொறுப்பேற்று இருக்கிறேன் என்று விஷால் கூறியுள்ளார்.;

Update:2025-10-21 17:38 IST

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். இவர் தற்போது 'மகுடம்' படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். மேலும் நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், கருத்து வேறுபாடு காரணமாக மகுடம் படத்திலிருந்து இயக்குனர் ரவி அரசு விலகினார். இதனையடுத்து இப்படத்தை யார் இயக்க போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். சில தினங்களுக்கு முன்பு கூட படப்பிடிப்பு தளத்தில் விஷால் இயக்கும் வீடியோ பதிவு காட்சிகள் இணையத்தில் வெளியானது.

இந்நிலையில், ‘மகுடம்’ படத்தின் 2வது லுக் போஸ்டரை வெளியிட்டு `மகுடம்' படத்தை தானே இயக்கப்போவதாக விஷால் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதன் மூலம் விஷால் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்.

இது தொடர்பாக விஷால் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் , “இந்த சிறப்பான நாளில், எனது புதிய படமான ‘மகுடம்’ படத்தின் 2-வது போஸ்டரை உங்களிடம் பகிர்ந்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். அதோடு படப்பிடிப்பு தொடங்கிய ஆரம்பகட்டத்திலேயே எடுத்திருந்த ஒரு முக்கியமான முடிவை இப்போது நான் அதிகாரபூர்வமாக அறிவிக்கிறேன். ‘மகுடம்’ திரைப்படம் எனது திரையுலக பயணத்தில் நான் இயக்குநராக எடுக்கும் முதல் முயற்சி. இப்படி ஒரு சூழ்நிலையை நான் எப்போதும் எதிர்பார்த்தது இல்லை. ஆனால், சில நேரங்களில் சூழ்நிலை நம்மை மிக பொறுப்புடனும், என் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பும் என் தயாரிப்பாளர்கள் என் மீது கொண்ட நம்பிக்கையும் இப்படி ஒரு முடிவை எடுக்க வைக்கின்றன. இந்த முடிவும் அவ்வாறே. இது ஒரு கட்டாய முடிவு அல்ல, பொறுப்புணர்வின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு. ஒரு நடிகராக நான் எப்போதுமே நம்புவது திரையுலகையும், என் மீது அன்பும், நம்பிக்கையும் கொண்ட உங்களையும், என்னை நம்பும் தயாரிப்பாளர்களையும்தான். அந்த நம்பிக்கையை காக்கும் பொறுப்பு எனக்கு உண்டு. அதனால் தான் இப்போது நான் இயக்குநராக பொறுப்பேற்று இருக்கிறேன். என் முடிவும் ஒரு புதிய ஒளியான துவக்கம். ” என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்