ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் - திருவண்ணாமலையில் அலைமோதிய பக்தர்கள்

இன்று நள்ளிரவு பவுர்ணமி நிறைவு பெறுவதால் தொடர்ந்து பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது.;

Update:2025-09-07 18:14 IST

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. குறிப்பாக திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தொலை கொண்ட கிரிவலப்பாதையில் நடந்து கிரிவலம் செல்கின்றனர். இந்த நிலையில் ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி இன்று அதிகாலை 1.46 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12.30 மணிக்கு நிறைவடைகிறது.

பவுர்ணமியை முன்னிட்டு நேற்று நள்ளிரவு முதலே திருவண்ணாமலைக்கு பக்தர்கள் வருகை தந்து கிரிவலம் செல்ல தொடங்கினர். இன்று அதிகாலையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இன்று பகலில் வெயில் கொளுத்தியது. வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

மேலும் இன்று அதிகாலை முதல் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. கோவிலில் பக்தர்கள் விரைந்து சாமி தரிசனம் செய்யும் வகையில் கோவிலுக்கு வெளியில் மட்டுமின்றி கோவில் உள்புறமும் பல்வேறு வரிசைகள் அமைக்கப்பட்டு இருந்தது. பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய 4 மணி நேரத்திற்கும் அதிகமானதாக தெரிவித்தனர். வரிசையில் சென்ற பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வாழைப்பழம், மோர், குடிநீர், பிஸ்கட், கடலை மிட்டாய் போன்றவை வழங்கப்பட்டன. 

தொடர்ந்து மாலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. பவுர்ணமி இன்று நள்ளிரவு நிறைவு பெறுவதால் தொடர்ந்து பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்படுகிறது.

மேலும் பவுர்ணமியை முன்னிட்டு போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கிரிவலப்பாதை மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர். மேலும் நகரில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

Full View
Tags:    

மேலும் செய்திகள்