காளையார் கோவில்: புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா
விழாவின் இறுதி நாளான இன்று புனித ஆரோக்கிய அன்னை, புனித அருளானந்தர், புனித மிக்கேல் அதிதூதர் ஆகியோரின் உருவம் தாங்கிய தேர் பவனி நடைபெற்றது.;
காளையார் கோவில் அருகே மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டிச்சியூரணி விலக்கு ரோட்டில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கடந்த மாதம் 29ஆம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் நவநாள் திருப்பலி நடைபெற்றது.
விழாவின் இறுதி நாளான இன்று புனித ஆரோக்கிய அன்னை, புனித அருளானந்தர், புனித மிக்கேல் அதிதூதர் ஆகியோரின் உருவம் தாங்கிய தேர் பவனி நடைபெற்றது. ஆண்டிச்சியூரணி கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல மாதா ஆலயத்தில் இருந்து புறப்பட்டு விலக்கு ரோட்டில் அமைந்துள்ள ஆலயம் வரை தேர் பவனி நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிவகங்கை மாவட்ட முதன்மைக் குரு அருட்தந்தை அருள் ஜோசப் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. மறை மாவட்ட பொருளாளர் அருட்தந்தை ஆரோன், முதன்மைச் செயலாளர் அருட்தந்தை மரிய டல்லஸ், சூசையப்பர் பட்டணம் பங்குத்தந்தை சூசைமாணிக்கம் உட்பட ஏராளமான குருக்கள் இணைந்து திருப்பலியை நிறைவேற்றினர்.
அதனைத் தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய 130-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு அன்னதானம் நடைபெற்றது. விழாவில் காளையார் கோவில் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.