முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை விழா கோலாகலம்
ஆடி கிருத்திகை விழாவில் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.;
ஆடி மாதம் அம்மனுக்கு மட்டுமல்லாமல், தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்கும் உகந்த மாதமாகும். ஆறுமுக பெருமானை வளர்த்த கார்த்திகை பெண்களைப் போற்றும் விதமாக, கிருத்திகை விரத நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
மாதம் தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது என்றாலும் ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் கூடுதல் சிறப்பை பெறுகிறது. முருகப் பெருமானுக்கான, பிரதான விழாவாக ஆடி கிருத்திகை கருதப்படுகிறது. அவ்வகையில் ஆடி கிருத்திகை நாளான இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
வடபழனி
சென்னை வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்தில் தமிழ் கடவுள் முருகபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை முதல் பக்தர்கள் காவடி எடுத்தும், பால் குடம் எடுத்தும், பால் காவடி, மலர் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். கூட்டம் அதிகமாக இருந்ததால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் பாரிமுனை கந்தகோட்டம் கந்தசாமி கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். குன்றத்தூர், சுப்ரமணிய சாமி கோவிலில், சிறப்பு மகா அபிஷேகம், தங்க கவசம், புஷ்ப அலங்காரம், மோட்ச தீபாராதனை வழிபாடு நடந்தது.
குன்றத்தூர்- வல்லக்கோட்டை
ஆறுபடைவீடு கோவில்களும் ஒரே இடத்தில் உள்ள பெசன்ட் நகர் ஆறுபடை வீடு முருகன் கோவில், குன்றத்தூர் சுப்ரமணியசாமி கோவில், சிறுவாபுரி பாலசுப்ரமணிய சாமி கோவில், திருப்போரூர் கந்தசாமி கோவில், வல்லக்கோட்டை சுப்பிரமணிய சாமி கோவில், குரோம்பேட்டை குமரன்குன்றம், பொன்னேரி பாலசுப்ரமணிய சாமி கோவில் மற்றும் நெசப்பாக்கத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இங்கு திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் நெரிசல் இன்றி சாமி தரிசனம் செய்யும் வகையில் கோவில்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.