கோவை: தூய மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் தேர் பவனி
தூயமிக்கேல் ஆண்டவர், ஆரோக்கிய மாதா கையில் குழந்தை ஏசுவை ஏந்திய தேர்கள் ஒன்றன் பின் ஒன்றாக பவனி வந்தன.;
கோவை பெரியகடை வீதியில் உள்ள தூய மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 21-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நேற்று இரவு நடைபெற்றது.
முன்னதாக நேற்று காலையில் மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி, குழந்தைகளுக்கு புது நன்மை உறுதி பூசுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6.30 மணியளவில் சிறப்பு கூட்டு பாடல் திருப்பலி நடந்தது. இதைதொடர்ந்து தேர் புனிதம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க தேர் பவனி நடைபெற்றது.
தூயமிக்கேல் ஆண்டவர், ஆரோக்கிய மாதா கையில் குழந்தை ஏசுவை ஏந்திய தேர்கள் ஒன்றன் பின் ஒன்றாக முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தன. இந்த தேர்கள் தேவாலயத்தில் இருந்து புறப்பட்டு பெரியகடை வீதி, கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதி உள்ளிட்ட வீதிகளில் பவனி வந்து மீண்டும் தேவாலயத்தை அடைந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.