திருப்பதியில் 30 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

நேற்று ரத சப்தமியையொட்டி பக்தர்கள் 30 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.;

Update:2026-01-26 07:49 IST

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ரதசப்தமி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதையொட்டி வாகனச் சேவைகளை பார்வையிட நேற்று முன்தினம் இரவு முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரசு பஸ்களிலும், அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகள் வழியாகவும், சொந்த மற்றும் வாடகை வாகனங்களிலும் திருமலைக்கு வரத்தொடங்கினர். இதனால் அலிபிரி டோல்கேட்டில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் கடும் அவதிப்பட்டனர்.

அதேபோல் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும், நான்கு மாடவீதிகளில் வாகனச் சேவையைப் பார்க்கவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்தனர். நாராயணகிரி தோட்டத்தில் உள்ள கொட்டகைகளில் பக்தர்கள் நிரம்பினர். மேலும் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி பாபவிநாசனம் செல்லும் சாலையில் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

தரிசன வரிசைகளில் சென்ற பக்தர்களுக்கு, திருமலையில் பக்தர்கள் அதிகம் கூடும் இடங்கள் என மொத்தம் 85 இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் லட்டு பிரசாதம் வினியோகம் செய்வதற்காக 5 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு இருந்தன. இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்கள் 30 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

நேற்று முன்தினம் 76 ஆயிரத்து 654 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 34 ஆயிரத்து 80 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று அறிவிக்கப்பட்ட ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 81 லட்சம் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்