விடுமுறை தினம்: திருவண்ணாமலையில் நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
ஏராளமான பக்தர்கள் தனித்தனியாக கிரிவலம் சென்ற வண்ணம் காணப்பட்டனர்.;
திருவண்ணாமலை,
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும். இந்த நிலையில் குடியரசு தினத்தையொட்டி நேற்று முன்தினம் முதல் இன்று வரையில் தொடர்ந்து 3 நாட்கள் என தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
இதையொட்டி நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவிலில் பக்தர்கள் ராஜகோபுரம் வழியாகவும், அம்மணி அம்மன் கோபுரம் வழியாகவும் தரிசனத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களின் கூட்டமானது அம்மணி அம்மன் கோபுரம் நுழைவு வாயிலுக்கு வெளியே வட ஒத்தவாடை தெருவில் நீண்டு காணப்பட்டது.
அதேபோல, குடியரசு தின விடுமுறை தினமான இன்றும் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பக்தர்கள் மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் தனித்தனியாக கிரிவலம் சென்ற வண்ணம் காணப்பட்டனர். இதனால் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்கள் மற்றும் இடுக்கு பிள்ளையார் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.