திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோலாகலமாக தொடங்கியது ரத சப்தமி விழா

ரத சப்ததி விழாவின் முதல் நிகழ்வாக சூரிய பிரபை வாகனத்தில் பகவான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.;

Update:2026-01-25 11:10 IST

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ரத சப்தமி விழா விமரிசையாக நடைபெறும். அன்றைய தினம் உற்சவர் மலையப்பசாமி காலை முதல் இரவு வரை 7 வாகனங்களில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

அவ்வகையில் இந்த ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி விழா இன்று கோலாகலமாக தொடங்கியது. முதல் வாகன சேவையாக, அதிகாலை 5.30 மணி முதல் காலை 8 மணி வரை சூரிய பிரபை வாகன வீதிஉலா நடைபெற்றது. ஜொலிக்கும் சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி, மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது மாட வீதிகளில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலையப்ப சுவாமியை தரிசனம் செய்தனர். பகவானுக்கு கற்பூர ஆரத்தி காண்பித்தும் வழிபட்டனர். காலை 9 மணி முதல் 10 மணி வரை சிறிய சேஷ வாகன வீதிஉலா நடைபெற்றது.


 



இதேபோல் அடுத்தடுத்து வாகன சேவைகள் நடைபெறுகின்றன. காலை 11 மணியளவில் கருட வாகன வீதிஉலா தொடங்கியது. மதியம் 1 மணி முதல் 2 மணி வரை அனுமந்த வாகன வீதிஉலா, மதியம் 2 மணி முதல் மாலை 3 மணி வரை கோவில் அருகில் உள்ள ஸ்ரீவாரி புஷ்கரணியில் சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி, மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை சர்வ பூபால வாகன வீதிஉலா, இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திர பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது. வாகன சேவைகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன

ரத சப்தமி விழாவில் பங்கேற்று பகவானை தரிசனம் செய்வதற்காக திருப்பதி திருமலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கோவில் மாட வீதிகள், தரிசன வரிசைகள் மற்றும் வெளிப் பகுதிகளில் அன்னப்பிரசாதம் தொடர்ச்சியாக விநியோகம் செய்யப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்