புண்ணியங்களை வழங்கும் பீஷ்ம தர்ப்பணம்
சந்ததி இல்லாத பிதாமகன் பீஷ்மருக்கு எள்ளும் தண்ணீரும் கொண்டு தர்ப்பணம் செய்வது என்பது குருவுக்குச் செய்யும் தர்ப்பணம் ஆகும்.;
பஞ்சபூதத்தில் நீரின் தன்மையை கொண்டது அஷ்டமி. தை மாத அமாவாசைக்கு பின்னர் 8-ம் நாளில் வரும் வளர்பிறை அஷ்டமி மிகவும் விசேஷமானது. இதனை பீஷ்மருக்கு உகந்தது என்கின்றனர். மகாபாரத்தில் கங்கை மைந்தன் பீஷ்மரை அறியாதவர்கள் யாரும் இல்லை. அவர் தன் தந்தைக்காக செய்த தியாகத்தின் பலனாக தந்தையிடம் இருந்து தான் விரும்பியபடி இறக்கும் வரத்தை பெற்றிருந்தார். அதாவது அவரே விரும்பாமல் அவரது உடலில் இருந்து உயிர் பிரியாது. யாரும் பெறா வரத்தை பெற்ற பீஷ்மர் இறுதியில் விதியின் சூழ்ச்சியால் கௌரவர்கள் பக்கம் போரிட நேர்ந்தது. அவரின் கர்ம வினைப்படி அனுபவிக்க வேண்டிய தண்டனைகளை அனுபவிக்க வைத்தது விதி. இதன் பலனாக போரில் அம்புகளினால் வீழ்த்தப்பட்டார்.
யுத்தகளத்தில் அர்ஜுனன் தொடுத்த அம்புகளால் துளைக்கப்பட்ட நிலையில் பீஷ்மர் அம்பு படுக்கை மீது கிடந்தார். தான் பெற்ற வரத்தினால் மோட்ச காலமான உத்தராயண காலத்தில் உயிர் துறக்க விரும்பி அம்பு படுக்கையில் காத்திருந்தார். அவரை சுற்றி கௌரவர்களும், பாண்டவர்களும் வணங்கி நின்றனர்.
முள் படுக்கையில் அவருடைய உடல் வேதனையில் துடித்தது. அப்போது அங்கு வந்த வியாசரிடம் "நான் செய்த பாவம் என்ன? எதற்காக என் உடல் இவ்வளவு வேதனையில் இருக்கிறது? நான் விரும்பிய நேரத்தில் மரணிக்கலாம் என்ற என் தந்தையின் வரத்தின்படி நான் நினைத்தபோது என்னால் மரணிக்க முடியாதபடி இந்த வேதனை என்னை அச்சுறுத்துகிறதே" என்று பீஷ்மர் கேட்டார்.
அதற்கு வியாசர் "பீஷ்மா ஒருவர் தன் மனதாலும், உடலாலும் ஒருவருக்கு செய்வது மட்டுமே தீமை, அநீதி இல்லை . நம் முன்பாக ஒரு கெட்ட செயல் நடக்கும்போது அதனை தடுக்காமல் இருப்பதும்கூட பாவம் தான். அதற்கான தண்டனையையும் அந்த நபர் அனுபவித்தே ஆக வேண்டும். நீ அனுபவிக்கும் வேதனை அப்படிப்பட்ட ஒரு தண்டனைக்குரியதுதான்.
உனக்கு அதிகாரம் இருந்தும், ஆற்றல் இருந்தும் திரௌபதிக்கு சபையில் நடந்த அநீதியை தடுக்காமல் நின்ற பாவம்தான், உன்னை மரணிக்க விடாமல் தடுத்து நிற்கிறது” என்று கூறியதுடன், அதில் இருந்து விடுபடுவதற்கான வழியையும் கூறினார்
உன்னுடைய வேதனையை சுட்டெரிக்க சூரியனின் அனுக்கிரகம் தேவை என்று கூறிய வியாசர், எருக்க இலைகளை கொண்டு பீஷ்மரை அலங்கரித்தார். இதனால் அவரது வேதனை குறைந்தது. கொஞ்சம் கொஞ்சமாக மன அமைதி அடைந்த பீஷ்மர், தியான நிலையிலே முக்தி அடைந்தார். அவர் முக்தி அடைந்தது தை மாதம் வளர்பிறை அஷ்டமி திதியில் என்பதால், அந்த நாள் 'பீஷ்மாஷ்டமி' என்று அழைக்கப்படுகிறது.
"பீஷ்மர் இறுதிவரை பிரம்மச்சரியத்தை கடைபிடித்தவர். இதனால் அவருக்கு பித்ரு கடன் செய்வது யார்?"என்று தருமர் வருந்தினார். அப்போது வியாசர் "ஒழுக்கம் தவறாத பிரம்மச்சாரிக்கும், தூய்மை விலகாத துறவிக்கும், பித்ருக்கடன் அவசியமே இல்லை. அந்த வகையில் பீஷ்மர் சொல் தவறாத நேர்மையாளர், தூய்மையானவர். வரும் காலத்தில் பீஷ்மருக்காக இந்த தேசமே பித்ரு கடன் செய்யும். அதற்கான புண்ணியத்தை அனைவரும் அடைவர்" என்றார்.
அதனால் ரத சப்தமிக்கு மறுநாள் பீஷ்மருக்கு மக்கள் தர்ப்பணம் செய்கிறார்கள். சந்ததி இல்லாத பிதாமகன் பீஷ்மருக்கு எள்ளும் தண்ணீரும் கொண்டு தர்ப்பணம் செய்வது என்பது குருவுக்குச் செய்யும் தர்ப்பணம் ஆகும். இது பித்ருக்கள் அனைவருக்கும் செய்யப்படுகிற தர்ப்பணம். பீஷ்ம தர்ப்பணத்தை செய்தால் மகா புண்ணியத்தை பெறலாம், இதன் மூலம் ஒட்டுமொத்த குருமார்களின் ஆசியையும் பித்ருக்களின் ஆசியையும் பெறலாம் என்பது நம்பிக்கை. அவ்வகையில் இன்று (26.1.2026) பீஷ்மாஷ்டமி கடைப்பிடிக்கப்படுகிறது. இன்றைய தினம் பீஷ்மரை நினைத்து தர்ப்பணம் செய்வதால் அவரது ஆசியையும் முன்னோர்களின் ஆசியையும் பெறலாம்.