பாளையங்கோட்டையில் தசரா விழா.. 11 அம்மன் சப்பரங்கள் அணிவகுப்பு
தசரா விழாவின் முக்கிய நிகழ்வாக, அக்டேபர் 3-ந்தேதி இரவு பாளையங்கோட்டை எருமைக்கிடா மைதானத்தில் மகிஷாசுர சம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது.;
பாளையங்கோட்டை ராமசாமி கோவில் திடலில் அணிவகுத்த அம்மன் சப்பரங்கள்
மைசூரு, குலசேகரன்பட்டினத்துக்கு அடுத்தபடியாக பாளையங்கோட்டையில் தசரா விழா விமரிசையாக நடைபெறும். பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவிலில் இந்த ஆண்டு தசரா விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதே போல் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள 11 அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜையுடன் தசரா விழா தொடங்கியது.
இதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 11 அம்மன் கோவில்களில் இருந்து உற்சவ அம்மன்கள் தனித்தனி சப்பரங்களில் எழுந்தருளினார்கள். பின்னர் வீதிஉலா நடைபெற்றது.
நேற்று காலை பாளையங்கோட்டை ராமசாமி கோவில் திடலில் 11 சப்பரங்கள் அணிவகுத்து நின்றன. பக்தர்கள் வரிசையாக வந்து தரிசனம் செய்தனர். தொடர்ந்து சப்பரங்கள் ராஜகோபாலசாமி கோவில் முன்பு நிறுத்தப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதை தொடர்ந்து சப்பரங்கள் அந்தந்த கோவில்களுக்கு புறப்பட்டு சென்றன.
இதை தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அக்டோபர் 3-ந்தேதி இரவு பாளையங்கோட்டை எருமைக்கிடா மைதானத்தில் மகிஷாசுர சம்ஹார நிகழ்ச்சியும், 4-ந்தேதி தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.