சதுர்த்தி விழா.. விழுப்புரம் மாவட்டத்தில் 1,650 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட ஏற்பாடு

விழுப்புரம் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் போலீசாரிடம் முன்அனுமதி பெற்றுள்ளனர்.;

Update:2025-08-24 13:06 IST

இந்துக்களின் முழுமுதற் கடவுளான விநாயகரை போற்றி வழிபடும் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 27-ந்தேதி (புதன்கிழமை) நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வழிபாட்டுக்காக தயார் செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை வீடுகளில் வைத்து வழிபட பொதுமக்கள் வாங்கிச்சென்ற வண்ணம் உள்ளனர். பல்வேறு இந்து அமைப்புகள் சார்பிலும், கோவில்கள் சார்பிலும் பிரமாண்ட சிலைகள் நிறுவப்பட்டு வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவ்வகையில் விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த பல்வேறு இந்து அமைப்பினர் தயாராகியுள்ளனர். அதாவது ஒரு அடி முதல் 10 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சிறிய அளவிலான சிலைகளை பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு வாங்கிச்செல்கின்றனர். 4 அடிக்கு மேல் உயரமுள்ள சிலைகளை வழிபாட்டுக்குழுவினர் முன்னதாகவே ஆர்டர் கொடுத்து வாங்கிச்சென்ற வண்ணம் உள்ளனர்.

இந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 1,650 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த பல்வேறு இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக அவர்கள், விழுப்புரம் காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 350 சிலைகளையும், செஞ்சி உட்கோட்ட பகுதிகளில் 570 சிலைகளையும், திண்டிவனம் உட்கோட்ட பகுதியில் 280 சிலைகளையும், கோட்டக்குப்பம் உட்கோட்ட பகுதிகளில் 200 சிலைகளையும், விக்கிரவாண்டி உட்கோட்ட பகுதியில் 250 சிலைகளையும் வைத்து வழிபாடு நடத்த போலீசாரிடம் முன்அனுமதி பெற்றுள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் வைக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.

சதுர்த்தி விழா முடிவடைந்த பின்னர் வழிபட்ட விநாயகர் சிலைகளை, பொதுமக்கள் ஊர்வலமாக எடுத்துச்சென்று நீர்நிலைகளில் கரைத்து விடுவது வழக்கம். அதற்காக கிழக்கு கடற்கரை மரக்காணம் முதல் கோட்டக்குப்பம் வரையுள்ள இடங்களான பொம்மியார்பாளையம், கைப்பானிக்குப்பம், எக்கியார்குப்பம் மற்றும் அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் குளம், வீடூர் அணை ஆகிய இடங்களில் மட்டுமே கரைப்பதற்கு போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். விநாயகர் சிலைகள் ஊர்வலத்தின்போது அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதோடு கடும் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்