சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் கந்த சஷ்டி விழா 21-ந் தேதி ஆரம்பம்

கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்வாக, அக்டோபர் 27-ந்தேதி மாலை சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும்.;

Update:2025-10-12 13:26 IST

நாகை மாவட்டம் சிக்கலில், பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றான சிங்காரவேலவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள வேல் நெடுங்கன்னி அம்மனிடம், முருகன் வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் செய்ததாக கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

முருகன், வேல் நெடுங்கன்னி அம்மனிடம் வேல் வாங்கும்போது முருகனின் முகம் மற்றும் திருமேனி முழுவதும் வியர்வை சிந்தும் அற்புத காட்சியை காண தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருவார்கள்.

இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் 10 நாட்கள் கந்தசஷ்டி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா வருகிற 21-ந்தேதி (செவ்வாய்) கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. இந்த விழாவானது 30-ந் தேதி வரை நடக்கிறது. 22-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 23-ந்தேதி இரவு ஆட்டுக்கிடா வாகனம், 24-ந்தேதி தங்கமயில் வாகனத்திலும், 25-ந்தேதி வெள்ளி ரிஷப வாகனத்திலும் சாமி வீதி உலா நடக்கிறது.

26-ந்தேதி காலை தேரோட்டமும், இரவு வேல் வாங்கும் நிகழ்ச்சியும், 27-ந்தேதி மாலை சூரசம்ஹார நிகழ்ச்சியும், 28-ந்தேதி தெய்வசேனை திருக்கல்யாணமும், 29-ந்தேதி வள்ளி திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடக்கிறது. பின்னர் 30-ந்தேதி விடையாற்றி நிகழ்ச்சி நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை நாகை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரேசன், உதவி ஆணையர் ராஜா இளம்பெருவழுதி, ஆய்வாளர் சதிஷ், கோவில் செயல் அலுவலர் மணிகண்டன் மற்றும் கோவில் பணியாளர்கள், கிராமவாசிகள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்