வேண்டுதல்களை நிறைவேற்றும் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி

சிறுவாபுரி தலத்தில் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானை ஆறு முறை வலம் வந்து வழிபாடு செய்தால் வாழ்வில் உள்ள துன்பங்கள் மறைந்து, இன்பம் பெருகும் என்பது நம்பிக்கை.;

Update:2025-12-10 16:28 IST

சொந்த வீடு என்பது பலரின் கனவாக உள்ளது. ஆனால், அது பலருக்கு எளிதாக கிடைப்பதில்லை. பல இன்னங்களை சந்தித்தும் அது நிறைவேறாமல் இருப்பவர்கள் ஏராளம். அந்த சொந்த வீடு கனவை நனவாக்கும் அற்புத தலமாக விளங்குகிறது சிறுவாபுரி முருகன் கோவில்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சின்னம்பேடு என்ற பகுதியில் அமைந்துள்ளது, சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில். இத்தல இறைவனை அருணகிரிநாதர் திருப்புகழில் புகழ்ந்து பாடியுள்ளார்.

இந்த ஆலயத்தில் திருக்கார்த்திகை, நவராத்திரி, தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, சூரசம்காரம் போன்ற விழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகின்றன.

இத்தல இறைவனுக்கு ஒரு மண்டலம் (48 நாட்கள்) நெல்லி முள்ளி பொடி கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால் தீராத நோய்களும் நீங்குவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இந்த வழிபாட்டுக்காக 48 நாட்களும் ஆலயத்துக்கு வர இயலாதவர்கள் நெல்லி முள்ளி பொடியை கோவில் அர்ச்சகரிடம் கொடுத்து, அபிஷேகம் செய்ய சொன்னால் போதும் என்கிறார்கள்.

இந்த ஆலயத்தில் உள்ள முருகப்பெருமானை தொடர்ந்து ஆறு செவ்வாய்க்கிழமைகள் வழிபட்டு, பின் திருமணக் கோலத்தில் காட்சி தரும் வள்ளி மணவாளப் பெருமானை வணங்கினால் திருமணத் தடை நீங்கி, விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

சொந்த வீடு கட்ட விருப்பம் உள்ளவர்கள், நிலம், வீடு சம்பந்தமான பிரச்சினை உள்ளவர்கள், சிறுவாபுரி பாலசுப்பிரமணியரை மனமுருகி வேண்டி வழிபட்டால் பிரச்சினைகள் விலகும், சொந்த வீடு கனவு நனவாகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இத்தல இறைனை ஆறு முறை வலம் வந்து வழிபாடு செய்தால் வாழ்வில் உள்ள துன்பங்கள் மறைந்து, இன்பம் பெருகும். ஜாதகத்தில் செவ்வாய்-சனி சேர்க்கை உள்ளவர்கள், இத்தலம் வந்து இறைவனுக்கு கொண்டைக்கடலை நைவேத்தியம் செய்து படைத்தால் நற்பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

கோவில், காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், சென்னையில் இருந்து வடக்கே சுமார் 33 கிலோமீட்டர் சென்று, அங்கிருந்து மேற்கே பிரியும் சாலையில் சென்றால் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலை அடையலாம். கவரப்பேட்டையில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் கோவில் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்