காரைக்கால் பொய்யாத மூர்த்தி விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
கும்பாபிஷேக விழாவில் புதுச்சேரி சபாநாயகர் செல்வம், அமைச்சர் திருமுருகன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.;
காரைக்கால் மாதா கோவில் வீதியில் பொய்யாத மூர்த்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் செய்வதற்காக திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. பணிகள் முடிந்ததை தொடர்ந்து, மகா கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. புதன்கிழமை 2 மற்றும் 3-ஆம் கால பூஜையும், வியாழக்கிழமை 4 மற்றும் 5-ஆம் கால பூஜையும் நடைபெற்றது.
புதிதாக எழுப்பப்பட்ட சந்நிதியில் விநாயகர் விக்ரஹகம் வியாழக்கிழமை ஸ்தாபனம் செய்யப்பட்டு மருந்து சாற்றப்பட்டது. தொடர்ந்து, இன்று காலை 5 மணிக்கு 6-ஆம் கால பூஜை தொடங்கப்பட்டு, 8 மணிக்கு பூர்ணாஹூதியும், கடம் புறப்பாடும் நடைபெற்று 8.30 முதல் 8.45 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் புதுச்சேரி சபாநாயகர் செல்வம், அமைச்சர் திருமுருகன், எம்எல்ஏக்கள் நாஜிம், நாக தியாகராஜன், சிவா, கலெக்டர் ரவி பிரகாஷ், மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லட்சுமி சௌஜன்யா, ஆலய நிர்வாக அதிகாரி காளிதாசன், காரைக்கால் புனித தேற்றரவு ஆலய பங்குத்தந்தை பால்ராஜ் குமார், திமுக விவசாய அணி பிரிவு அமைப்பாளர் பிரித்திவிராஜ், பாரதிய ஜனதா மாவட்ட பொறுப்பாளர் மீனாட்சி சுந்தரம், இந்து முன்னணி நகரத் தலைவர் ராஜ்குமார் மற்றும் திருப்பணி குழுவினர், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு ஏராளமானோர் கோவிலை சுற்றி அன்னதானம் செய்தனர்.