ஆன்மிக கலாசார மாநாடு: திருவண்ணாமலையில் 1008 பெண்கள் பங்கேற்ற மங்கள விளக்கு பூஜை
மங்கள விளக்கு பூஜையை ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.;
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் வேத ஆகம தேவார ஆன்மிக கலாசார மாநாடு 2 நாட்கள் நடைபெற்றது. 2-வது நாளான இன்று காலை, உலக நன்மைக்காக மாநாட்டு அரங்கில் 1008 பெண்கள் பங்கேற்ற மாபெரும் மங்கள விளக்கு பூஜை, சுமங்கலி பிரார்த்தனை நடைபெற்றது. மாநாட்டின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பி.டி.ரமேஷ் குருக்கள் தலைமை தாங்கினார். வேத ஆகம தேவார ஆன்மிக கலாசார டிரஸ்ட் நிர்வாகி ஜெகதீஷ் கடவுள் முன்னிலை வகித்தார்.
இதில் சிறப்பு விருந்தினராக ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி மங்கள விளக்கு பூஜையை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், “அஷ்டமி, நவமி, சதுர்த்தசி, அமாவாசை, பௌர்ணமி நாட்களில் அம்பாளை தரிசிப்பது மிகவும் சிறப்பானது. பார்வதி தேவியும், பரமேஸ்வரனும் தவம் செய்து இருவரும் ஆதி தம்பதிகளாக விளங்குகிறார்கள்.
ஒரு மனிதர் எப்படி வாழவும், படிக்கவும் வேண்டும், இல்லறத்தை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு பாரத தேசம் எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது. ஒரு மகனையோ, மகளையோ பொறுப்பாக வளர்க்கும் கடமையை நம்முடைய பாரத தேசத்தினுடைய தாய்மார்கள் நன்றாக செய்து வருகிறார்கள். நம்முடைய பாரம்பரியமான உடைகளை அணிவதற்கு அவர்களை பழக்கப்படுத்த வேண்டும். பாரம்பரியமான பழக்க வழக்கத்தை அவர்களுக்கு பழக்கப்படுத்தி பக்தி பூர்வமாக வளர்த்து சிறந்தவர்களாக அவர்களை உருவாக்குவதில் பெண்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது” என்றார்.
தொடர்ந்து திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மிராசு அர்ச்சகம் இளவரசு பட்டம் பி.டி.ஆர். கோகுல்குருக்கள் எழுதிய அருணாச்சல தீர்த்த மகிமை புத்தகம் வெளியிடப்பட்டது. இதில் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள், பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.