இயற்கையில் இறைவனை காண்போம்

இயேசு தனது போதனைகளில் காகங்கள், காட்டு மலர்கள், திராட்சைக்கொடி, ஒலிவ மரக்கன்று என இயற்கையை முன்னிலைப்படுத்துகிறார்.;

Update:2026-01-27 14:40 IST

இறைவன் மக்களித்த மிகப்பெரிய கொடை இயற்கை. மனிதனை படைப்பதற்கு முன்பே தேவன், வானம், பூமி, கடல், புல்பூண்டுகள், கனிதரும் மரங்கள், பறவைகள், விலங்குகளைப் படைத்தார். ஏதேன் என்னும் தோட்டத்தையும் உருவாக்கி தோட்டத்திற்குத் தண்ணீர் பாயும்படி ஒரு நதி ஓடி அதிலிருந்து நான்கு நதிகளாகப் பிரிந்தன (ஆதியாகமம் 2:10).

தேவன் வானத்திலிருந்து மழையையும் செழிப்புள்ள காலங்களையும் தந்து ஆகாரத்தினாலும், சந்தோஷத்தினாலும், இருதயங்களை நிரப்பினார் (அப்போஸ்தலர் 14:17).

இன்று மனிதன் இயற்கையை அழித்து சுயநலமாய் வாழ்வதால் வறட்சியை அனுபவிக்கிறான். உலகின் பல பகுதிகளிலும் உள்ள மக்கள் பசி பட்டினியால் வாடுகின்றனர். மரங்களை வெட்டுவதால் மழை குறைந்து விட்டது. விஞ்ஞான வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து இயற்கையை அழிக்க தொடங்கிவிட்டான் மனிதன்.

பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடைய வேண்டுமென முன் மாரியும், பின் மாரியும் வருமளவும் காத்திருந்தார் (யாக் கோபு 5:7).

மனிதனின் துன்மார்க்கமான செயல்களால் விவசாயிகள் போதுமான மழையின்றி, வறுமையில் வாடுகின்றனர். மழைநீர் ஆதாரத்திற்காகவும், மண்வளத்தை காக்கவும் மரங்கள் மிகவும் அவசியம். காற்று மாசிலிருந்து காப்பவை மரங்களே.

மரங்களை வெட்டி சேதம் பண்ணாயாக; விருட்சங்கள் மனுசனுடைய ஜீவனத்துக்கானவைகள் (உபாயாகமம் 20:19) என்ற இறைவார்த்தையை மனிதர்கள் மறந்து விடுகின்றனர்.

விலங்குகள், பறவைகள், அரியவகை உயிரினங்கள் வாழும் காட்டினை அழித்து வீடுகளை கட்டுவதால், காட்டு விலங்குகள் ஊருக்குள் புகுந்து ஊறு விளைவிக்கின்றன. மனிதன் இயற்கையில் இருக்கும் இறைவனை காண வேண்டும். இயற்கையோடு இணைந்து வாழ்வது இறைவனோடு இணைந்து வாழ்வது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மனிதர்கள் மகிழ்ச்சியாய் வாழ்வதற்காக இறைவன் நீர் நிலைகளையும், ஆறு, ஏரி குளங்களையும் உருவாக்கினார். மனிதனோ தொழிற்சாலை கழிவுகளையும், கழிவு நீரையும், நீர் நிலைகளில் கலக்கச்செய்து மாசடையச் செய்துவிட்டனர்.

எங்கள் தண்ணீரைப் பணத்துக்கு வாங்கி குடிக்கிறோம் (புலம்பல் 5:4) என்ற எரேமியா தீர்க்கத்தரிசியின் தீர்க்க தரிசனம் இன்று உண்மையாகி உள்ளது.

ஆண்டவரின் போதனைகளும், ஆசீர்வாதங்களும் இயற்கையோடு இணைந்தே வார்த்தைகளாயிருந்தன. நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீருற்றைப் போலவும், இருப்பாய் (ஏசாயா: 58:11) என இறைவன் ஆசீர்வதிக்கிறார்.

இயேசு தனது போதனைகளில் காகங்கள், காட்டு மலர்கள், திராட்சைக்கொடி, ஒலிவ மரக்கன்று என இயற்கையை முன்னிலைப்படுத்துகிறார். இவ்வாறு இயற்கையோடு இணைந்து வாழ்வதையே இறைவன் விரும்புகிறார்.

இயற்கையை படைத்த இறைவன், அதனை தான் படைத்த மனிதனுக்கு பரிசாக கொடுத்திருக்கிறார். ஆனால் அதை நாம் எப்படி பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

இயற்கையில் இறைவனை எப்படி காண்பது என்கிற கேள்வியை கேட்கலாம். அதற்கு பதிலாக லொயோலா இஞ்ஞாசியார் என்கிற துறவி இறையன்பை அடையும் காட்சி தியானம் என்பதன் வழியாக இயற்கையில் இறைவன் இருப்பதை உணரச் சொல்கிறார்.

மரம், செடிகளோடு நேரம் செலவழித்து, அவற்றோடு உரையாடச் சொல்கிறார். ஒரு இலையின் சிறு அசைவும் இறைவனின் மொழி என்று பதிவு செய்கிறார். நம் மீது படும் காற்றும், பூத்துக்குலுங்கும் மலர்களும் இறைவனின் பிரசன்னத்தை வலியுறுத்துகிறது.

துறவிகள் பலருடைய வரலாற்றை பார்த்தோமானால் அவர்கள் மலையிலும், குகையிலும், காட்டிலும் அமர்ந்து செபித்தனர் என்பதை அறிகிறோம். இயேசு கிறிஸ்து செபிப்பதற்காக மலைக்கு சென்றார் என்பதை விவிலியத்தில் வாசிக்கிறோம். இவ்வாறு இயற்கை இறைவனை பிரதிபலிக்கிறது.

ஒவ்வொரு நாளும் ஐந்து நிமிடமாவது இயற்கையான சூழலில் இருந்து செபிப்போம். அது ஒரு செடியாகவோ, மரமாகவோ, வானத்தை அண்ணாந்து பார்க்கும் விதமாகவோ இருக்கலாம். அந்த தருணத்தில் இயற்கையை படைத்த இறைவனுக்கு நன்றி கூறுவோம்.

இதை தொடர்ந்து செய்கிறபோது நாம் இயற்கை மீது அக்கறை கொள்பவர்களாக மாறுவோம். ஒரு செடியை வளர்ப்பதும், அதற்கு தண்ணீர் ஊற்றுவதும் செபமே. இந்த எளிய செயல்பாடு நமக்குள் பெரும் மாற்றத்தை தரும். இறைவனை இயற்கையில் காண உதவி செய்யும்.

விவிலியத்தில் உன்னதப்பாட்டு எனும் நூலில் இயற்கையின் உன்னதத்தை காண்கிறோம். அத்தி, மாதுளை, குங்குமமும், வசம்பும், லவங்கமும், பல விதமான மரங்களும் நிறைந்த சிங்காவனம் இருந்தது. இன்று இத்தகைய மரம், செடி, கொடிகள் குறைந்து கொண்டே வருகின்றன. இதற்கான காரணங்களை அறிந்து, இயற்கையை பாதுகாக்கும் செயல்பாடுகளை செய்வோம். இறைவன் நமக்கு கொடுத்திருக்கும் இயற்கை கொடைகளை அடுத்த தலைமுறைக்கு பாதுகாத்து கொடுப்போம். இயற்கையில் இறைவனை காணும் முயற்சியில் அன்றாடம் ஈடுபடுவோம்.

-ஜெபா நியூட்டன், திருநெல்வேலி.

Tags:    

மேலும் செய்திகள்