புரட்டாசி கடைசி சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை.. ஏராளமான பக்தர்கள் தரிசனம்

புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.;

Update:2025-10-12 12:17 IST

பெருமாளுக்கு உகந்த மாதமாக புரட்டாசி மாதம் உள்ளது. இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அவ்வகையில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையான நேற்று பெருமாள் கோவில்களில் கூட்டம் அலை மோதியது.

காரமடை அரங்கநாதர்

கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாதர் நீல நிறப் பட்டுடுத்தி வெள்ளிச் சப்பரத்தில் வெண்பட்டு குடை சூழ மேள வாத்தியம் முழங்க கோவிலில் வலம் வந்து திருக்கல்யாண மண்டபத்தை அடைந்தார். தொடர்ந்து திருவாராதனம், மந்திர புஷ்பம், அஷ்டோத்திரம் சேவிக்கப்பட்டு மங்கள ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

அதிகாலை முதலே திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மூலவர் அரங்கநாத பெருமாளையும், உற்சவ மூர்த்தியையும் வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்கள், அரிசி, பருப்பு, காய்கறிகளை, கோவில் வளாகத்தில் இருந்த தாசர்களுக்கு படையலிட்டனர். பின் தாசர்களிடம் இருந்து சிறிதளவு காய்கறி, அரிசி, பருப்பு வகைகளை மடியேந்தி பெற்று வீட்டிற்கு கொண்டு சமைத்து சாப்பிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் எம்.கே.கே.தேவ் ஆனந்த், மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் எம். எம்.ராமசாமி, கார்த்திகேயன், சுஜாதா ஜவகர், குண சேகரன் மற்றும் கோவில் செயல் அலுவலர் (பொறுப்பு) போபிஷானி ஆகியோர் செய்திருந்தனர்.

சிறப்பு பூஜை

கோவை உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் நேற்று அதிகாலை பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதுபோல் கோட்டை கரிவரதராஜ பெருமாள் கோவிலிலும் புரட்டாசி பெருமாளுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஒலம்பஸ் நரசிங்க பெருமாள் கோவிலில் அதிகாலை முதல் பக்தர்கள் வழிபட்டனர். கோவை சலீவன் வீதியில் உள்ள வேணு கோபால கிருஷ்ணசாமி கோவிலில் உற்சவருக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பாப்பநாயக்கன்பாளையம் சீனிவாச பெருமாள் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

கருமத்தம்பட்டி

சூலூரில் புகழ் வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வேங்கடநாதப் பெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

கருமத்தம்பட்டி கரிய மாணிக்க பெருமாள் கோவிலிலும் பெருமாள் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இது போல் பெரியநாயக்கன்பாளையம் குப்பிச்சிபாளையம் ரோடு கரிவரதராஜ பெருமாள் கோவில், நாயக்கன்பாளையம் பெருமாள் கோவில், திருமலைநாயக்கன்பாளையம் உலகளந்த ராஜப்பெருமாள் கோவில், இடிகரை பள்ளி கொண்டரங்கநாதர் கோவில் மற்றும் பாலமலை அரங்கநாத பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

கோவை உடையாம்பாளையம் பகுதியில் உள்ள பழமைவாய்ந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று கடைசி புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சிறப்பு வழிபாட்டினை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்