ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.;
திருவனந்தபுரம்,
கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த நாட்களில் இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து பல லட்சக் கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.
இந்த நிலையில், ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு பிரம்ம தத்தன் முன்னிலையில், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார். தொடர்ந்து, கற்பூர ஆழியில் தீ மூட்டப்பட்டது. நடை திறப்பையொட்டி, இன்று மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை.
கோவில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றது. நாளை முதல் 21-ந் தேதி வரை 5 நாட்கள் தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபி ஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜை வழிபாடுகள் நடைபெறும்.
21-ந் தேதி வரை தந்திரி தலைமையில் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபி ஷேகம் உட்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும். அன்றைய தினம், அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.