ஒரே வளாகத்தில் சிவன் சன்னதி, பெருமாள் சன்னதி: பொன்னூர் ஆலயத்தின் சிறப்பு

பொன்னூர் திருக்காமீஸ்வரர் ஆலயத்தில் ஒரே இடத்தில் நின்றவாறு சுவாமியையும், அம்பாளையும் தரிசனம் செய்யலாம்.;

Update:2025-08-25 13:44 IST

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் இருந்து 10 கிமீ தொலைவில் உள்ள பொன்னூர் கிராமத்தில் அமைந்துள்ளது திருக்காமீஸ்வரர் ஆலயம். இந்த கோவில் வளாகத்தில் மேற்கு நோக்கியவாறு பெருமாள் சன்னதியும், கிழக்கு நோக்கியவாறு சிவன் சன்னதியும் அமைந்திருப்பது சிறப்பு. இவ்வாறு சிவபெருமானும், மகா விஷ்ணுவும் ஒரே தலத்தில் அருள்பாலிப்பதால் இது சிறந்த பிரார்த்தனை தலமாக விளங்குகிறது. பக்தர்களின் வேண்டுதல்கள் எதுவாக இருந்தாலும் உடனே நிறைவேறும் என்பது நம்பிக்கை.

இதேபோல் சிவன் சன்னதியும் அம்பாள் சன்னதியும் ஒரே சபா மண்டபத்தைக் கொண்டு அமைந்துள்ளதால் ஒரே இடத்தில் நின்றவாறு சுவாமியையும், அம்பாளையும் தரிசனம் செய்யலாம். இறைவன் சன்னதி கிழக்கு முகமாகவும், அம்பாள் சன்னதி தென்முகமாகவும் உள்ளது.

இறைவன் திருக்காமீஸ்வரர் என்று அழைக்கப்படுகின்றார். பராசரேஸ்வரர், பிரம்மேஸ்வரர் போன்ற பெயர்களாலும் போற்றப்படுகின்றார். இறைவி சாந்தநாயகி. கோவில் வளாகத்தில் வடக்கே சுமார் 7 அடி உயர மகாவிஷ்ணு சிலை ஒன்றுள்ளது. இதுவே பெருமாள் கோவிலின் பழைய மூலவராகும். இவரது சிலை அத்தி மரத்தினால் மிகவும் கலை நயத்துடன் செய்யப்பட்டுள்ளது. இக்கோவில் பல்லவர் காலத்தில் கட்டப்பெற்றதாகும். பெருமாளின் திருநாமம், அழகர் பெருமாள். ஸ்ரீகரண விண்ணகரப் பெருமாள் எனவும் போற்றப்படும் இவர், ஸ்ரீ தேவி -பூதேவியுடன் காட்சி தருகின்றார்.

இத்தலத்தில் சிவபெருமான், அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்தும் பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்