தைலாபுரம் பரிசுத்த உபகார அன்னை ஆலய திருவிழா இன்று துவக்கம்
விழாவின் 9-ம் நாள் இரவில் அன்னை மற்றும் புனிதர்களின் சப்பர பவனி நடைபெறும்.;
நாசரேத் அருகே தைலாபுரம் பரிசுத்த உபகார அன்னை ஆலய திருவிழா இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தூத்துக்குடி தூய சார்லஸ் ஆலய பங்குத்தந்தை பீட்டர் பாஸ்டின் தலைமை தாங்கி, ஆலய கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றுகிறார். தூத்துக்குடி பொதுநிலையினர் பணியக இயக்குனர் சகாயராஜ் மறையுரையாற்றுகிறார். தொடர்ந்து புனித மிக்கேல் அதிதூதர் சப்பர பவனி நடைபெறுகிறது.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் அதிகாலை 5.30 மணிக்கு நவநாள் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு மறையுரை, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது.
9-ம் திருநாளான 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலையில் சிறப்பு மாலை ஆராதனை மறைமாவட்ட முதன்மை குரு ரவிபாலன் தலைமையில் நடக்கிறது. சங்கரன்கோவில் வட்டார முதன்மை குரு ஜோசப் கென்னடி மறையுரையாற்றுகிறார். இரவில் அன்னை மற்றும் புனிதர்களின் சப்பர பவனி நடைபெறும்.
10-ம் திருநாளான 27-ந்தேதி (சனிக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு சப்பர நற்கருணை ஆசீர், காலை 6.30 மணிக்கு திருவிழா திருப்பலி நடக்கிறது. பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி முதல்வர் காட்வின் ரூபஸ் மறையுரையாற்றுகிறார். காலை 10 மணிக்கு திருமுழுக்கு வழங்குதல், 11 மணிக்கு புனிதர்களின் சப்பர பவனி, மாலை 6.30 மணிக்கு நற்கருணை பவனி, இரவு 9 மணிக்கு கொடியிறக்கம், இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ராபின் ஸ்டாலின் தலைமையில் விழா நிர்வாகி அந்தோணி வினோத், ஒருங்கிணைப்பாளர் மனோகரன், டிரஸ்ட் நிர்வாகிகள் ராஜபாண்டி, வில்லியம், ரவீந்திரன், கிறிஸ்டோபர், சிலுவை முத்துக்குமார் மற்றும் விழா குழுவினர், இறைமக்கள் செய்து வருகின்றனர்.