சோழவந்தான் அருகே வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பொதுமக்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.;
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஜெயலட்சுமி விஜயலட்சுமி சமேத வரதராஜ பெருமாள் திருக்கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது.
இதற்கான திருப்பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்ற நிலையில் நேற்று முன்தினம் காலை திருக்கோஷ்டியூர் லட்சுமி நரசிம்ம அய்யங்கார் தலைமையில் மங்கள இசை உடன் விஷ்வக்சேனர் முதலாம் கால யாக பூஜை நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடர்ந்து புண்யாவாசனம், வாஸ்து சாந்தி ஹோமம், அங்குரார்பணம் நடைபெற்றது. விமான கலசம் பிரதிஷ்டை நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து இன்று காலை மூன்றாம் நாள் யாகசாலை பூஜை நடைபெற்றது. அதன்பின்னர், காலை 9 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பொதுமக்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
பெரிய இலந்தைகுளம் பெரிய கருப்பணசுவாமி கோவில் கும்பாபிஷேகம்
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பெரிய இலந்தைகுளம் கிராமத்தில் அமைந்துள்ள சீலைக்காரி அம்மன், பெரிய கருப்பணசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த சிறப்பு யாகசாலை பூஜையில் வாஸ்து பூஜை அதனைத் தொடர்ந்து பல்வேறு சிறப்பு ஹோமங்கள் நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது. இரண்டு கால யாகவேள்வி பூஜைகள் நிறைவடைந்த பின், கடம் புறப்பாடு நடைபெற்றது. புனித நீர் அடங்கிய கும்பம், அர்ச்சகர்களால் கோவிலை சுற்றி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, பின் சுவாமி சிலைகள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.