விநாயகர் சதுர்த்தி பூஜையில் முதன்மையான நைவேத்யம் இதுதான்..!

ஒவ்வொரு நாளும் விநாயகர் வழிபாட்டிற்கு உகந்ததாக இருந்தாலும், அவரது அவதார தினத்தன்று வழிபடுவது சிறப்பானது.;

Update:2025-08-26 17:01 IST

இந்து மதத்தில் முழுமுதற் கடவுளாக போற்றப்படும் விநாயகப் பெருமான், ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி தினத்தில் அவதரித்ததாக கூறப்படுகிறது. ஆண்டுதோறும் இந்நாளையே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு நாளை (27.8.2025) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

விநாயகரை வணங்கி எந்த செயலை தொடங்கினாலும் அது சிறப்பானதாக அமையும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது. ஒவ்வொரு நாளும் விநாயகர் வழிபாட்டிற்கு உகந்ததாக இருந்தாலும், அவரது அவதார தினத்தன்று வழிபடுவது இன்னும் சிறப்பானது. விநாயகர் சதுர்த்தி நாளில் அவரை வழிபடும்போது வாழ்க்கையில் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகும் என்ற நம்பிக்கை உள்ளது.

விநாயகர் வழிபாட்டில் கொழுக்கட்டை, மோதகம், லட்டு, அப்பம், அவல், பொரி, கடலை, சுண்டல் ஆகியவை இடம்பெறுகின்றன. இவ்வாறு பல விதமான நைவேத்தியங்கள் படைக்கப்பட்டாலும், அதில் முதன்மை இடத்தை பிடிப்பது மோதகம்தான். வீட்டில் பூஜிக்கப்படும் விநாயகர் கையில் மோதகம் இருக்க வேண்டும் என்பார்கள். மோதகம் என்பது தேங்காய், வெல்லப்பாகு, அரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து செய்யப்படும் பதார்த்தம் ஆகும்.

விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு மோதகம் படைத்து வழிபட்டால், வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம். விநாயகருக்கு மோதகம் நைவேத்தியமாக படைப்பதற்கு முக்கியமான காரணம் உண்டு.

மோதகம் என்றால் மோதக் + அகம் ஆகும். மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு 'வழங்கக் கூடியது' என்று பொருள். மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் வழங்கக் கூடிய பொருள் என்பதால் மோதகத்தை விநாயகருக்கு படைத்து வழிபடுவது சிறப்பானதாகும். இந்த நைவேத்யத்தின் சிறப்பு குறித்து புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு சமயம் அத்ரி ரிஷியின் மனைவியான அனுசுயா, சிவன், பார்வதி, விநாயகர் ஆகியோரை விருந்திற்காக அழைத்திருந்தார். எந்த உணவை கொடுத்தாலும் விநாயகரின் பசியை போக்க முடியாது என்பதை புரிந்து கொண்ட அனுசுயா, இனிப்பு கலந்த மோதகத்தை சாப்பிடக் கொடுத்தார். மொத்தமாக 21 மோதகங்களை விநாயகருக்கு அளித்தார். அதை சாப்பிட்டதும் விநாயகப் பெருமானின் பசி முழுவதுமாக நீங்கி, மகிழ்ச்சி அடைந்தார்.

இதைக் கண்ட பார்வதி தேவி, அனுசுயாவை போல் எவர் ஒருவர் விநாயகருக்கு மோதகம் படைத்து வழிபடுகிறார்களோ அவர்களின் விருப்பங்கள் அனைத்தையும் விநாயகப்பெருமான் நிறைவேற்றி வைப்பார் என வரம் அளித்தார். பார்வதி தேவி அளித்த வரத்தின்படி, பக்தர்கள் விநாயகரிடம் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறுவதற்காக மோதகத்தை நைவேத்தியமாக படைக்கிறார்கள்.

விநாயகருக்கு முதன்முதலில் மோதகம் படைத்து, அவரது அருளை பெற்றவர் அருந்ததி தேவி என்று கூறப்படுகிறது. கற்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்து, வானில் இன்றும் விண்மீனாய் வலம் வருபவர் வசிஷ்டரின் மனைவியான அருந்ததி. புண்ணிய பலன் காரணமாக ஒரு முறை வசிஷ்டரின் ஆசிரமத்துக்கு விஜயம் செய்தார் விநாயகர். அவர் வருவதை அறிந்த அருந்ததி, அவருக்காக புதிய நைவேத்தியம் செய்ய விரும்பினார்.

விநாயகப் பெருமான், அண்டத்தின் எல்லா இடங்களிலும் நிறைந்து இருப்பவர். இதனால் அண்டத்தை உணர்த்தும் விதமாக வெள்ளை மாவினால் 'செப்பு' எனும் மேல் பகுதியை செய்தார். அண்டத்தின் உள்ளே பூரணமாக நிறைந்திருக்கும் விநாயகரை உணர்த்தும் விதமாக, இனிப்பான பூரணத்தை மாவுக்குள்ளே வைத்து மோதகத்தை தயார் செய்தார். பின்பு வசிஷ்டரிடம் அதைக் கொடுத்து விநாயகருக்கு படைத்தார்.

அப்படி அவர் அளித்த பிரசாதத்தின் தத்துவச் சிறப்பை உணர்ந்த பிள்ளையார், அதை உலகுக்கு உணர்த்தும் விதமாக, மோதகத்தை எப்போதும் தன் திருக்கரங்களில் ஏந்திக் கொண்டிருக்கிறார். அருந்ததி மூலம் நமக்குக் கிடைத்த அந்த அருள் பிரசாதத்தைப் போன்றே, நம் வாழ்வும் பூரணத்துவம் பெற, விநாயகர் சதுர்த்தி தினத்தன்று மோதகம் படைத்து பிள்ளையாரை வழிபடுவோம்.

Tags:    

மேலும் செய்திகள்