மாவட்ட செய்திகள்
நடுக்கடலில் இலங்கை மீனவர்கள் அடாவடி: நாகை மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

வேதாரண்யம் அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள், பெட்ரோல் குண்டு வீசியும், கம்பால் தாக்கியும், வலைகளை அறுத்து சேதப்படுத்தியும் விரட்டி அடித்தனர். இந்த அடாவடி சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் ஆறுகாட்டுத்துறை, செருதலைக்காடு, கோடியக்கரை, பெரியகுத்தகை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி உள்பட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை உள்ளிட்ட இடங்களில் இருந்து பைபர் படகு எனப்படும் சிறிய வகை படகுகளிலும், விசைப்படகு எனப்படும் பெரிய படகுகளிலும் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகிறார்கள்.

வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறையில் இருந்து மட்டும் ஒரு நாளைக்கு 50-க்கும் மேற்பட்ட சிறிய வகை பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகிறார்கள். ஒரு படகிற்கு 4 அல்லது 5 மீனவர்கள் வீதம் கடலுக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வேதாரண்யம் உள்ளிட்ட நாகை மாவட்ட பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு இலங்கை நாட்டை சேர்ந்த மீனவர்கள் மற்றும் அந்நாட்டு கடற்படை மூலமாக தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து வருகிறது. எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி நாகை மீனவர்களை, இலங்கை கடற்படை சிறைப்பிடித்து செல்வதும் உண்டு. அப்போது மீனவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படை பறித்து சென்று விடுகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படுகிறது.

அதேபோல இலங்கை மீனவர்களும் அவ்வப்போது நாகை மீனவர்களை தாக்குவது, வலைகளை பறித்து செல்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் நாகை மீனவர்கள் ஒருவித அச்சத்துடனேயே கடலுக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட வேண்டிய நிலை உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறை மீனவர் கிராமத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன், சுகுமார், மணி, சிவபாலன், செல்வன் ஆகியோருக்கு சொந்தமான 5 பைபர் படகுகளில் இவர்கள் உள்பட 20 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே நடுக்கடலில் 20 மீனவர்களும் தங்கள் படகுகளை நிலை நிறுத்தி வலை வீசி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு 5 படகுகளில் 10-க்கும் மேற்பட்ட இலங்கை மீனவர்கள் வந்தனர். இவர்கள், ஆறுகாட்டுத்துறை மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்து, அச்சுறுத்தும் விதமாக மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். அதிர்ஷ்டவசமாக பெட்ரோல் குண்டுகள் ஆறுகாட்டுத்துறை மீனவர்களின் படகுகள் மீது விழவில்லை. இதனால் மீனவர்கள் உயிர் தப்பினர்.

இதனைத்தொடர்ந்து ஆறுகாட்டுத்துறை மீனவர்களை, இலங்கை மீனவர்கள் கம்பால் தாக்கினர். வலைகளை அறுத்து சேதப்படுத்தினர். மேலும் கத்தியை காட்டி மிரட்டி ரூ.8 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகளையும் இலங்கை மீனவர்கள் பறித்துக்கொண்டு, ஆறுகாட்டுத்துறை மீனவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர்.

இதனால் பதறிப்போன ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் கரைக்கு திரும்பினர். நேற்று காலை மீன்கள் எதுவுமின்றி வெறுங்கையுடன் ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு மீனவர்கள் வந்து சேர்ந்தனர். பின்னர் இலங்கை மீனவர்களின் அடாவடி செயல்கள் குறித்து ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் கடலோர காவல் குழுமத்திடமும், மீன்வளத்துறை அதிகாரிகளிடமும் புகார் அளித்தனர்.

இலங்கை மீனவர்கள், நாகை மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் நாகை மாவட்ட மீனவர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.