‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு
இந்தியாவின் எதிர்காலம் தன்னலமின்றி சேவை செய்யும் இளைஞர்களை சார்ந்துள்ளது என ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.;
சண்டிகர்,
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள குருநானக் தேவ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். இந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியதாவது;-
“பட்டப்படிப்பை முடித்த பிறகு, மாணவர்கள் அரசு மற்றும் தனியார் பணிகள், உயர்கல்வி, ஆராய்ச்சி, தொழில்முனைவு அல்லது கற்பித்தல் தொழில் உள்ளிட்ட பல்வேறு திசைகளில் பயணங்களை தொடங்குவார்கள்.
ஒவ்வொரு துறைக்கும் வெவ்வேறு தகுதிகள் மற்றும் திறன்கள் தேவைப்பட்டாலும், அனைத்து துறைகளிலும் முன்னேற்றத்திற்கு சில குணங்கள் அவசியம். அதில் முக்கியமாக கற்றல் மீது இருக்கும் ஆர்வம், நேர்மை, மாற்றத்தை ஏற்கும் தைரியம், தோல்வியில் இருந்து கற்றுக்கொள்ளும் உறுதிப்பாடு, அறிவு மற்றும் திறன்களை தேசத்தின் நன்மைக்காக பயன்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
இந்த குணங்கள் மாணவர்களை நல்ல நிபுணர்களாக மட்டுமல்லாமல் பொறுப்புள்ள குடிமக்களாகவும் மாற்றும். கல்வி என்பது வெறும் வாழ்வாதாரத்திற்கான வழிமுறை மட்டுமல்ல, சமூகத்திற்கும் தேசத்திற்கும் சேவை செய்வதற்கான ஒரு வழிமுறையாகும்.
மாணவர்கள் தங்கள் கல்விக்கு பங்களித்த சமூகத்திற்கு கடன்பட்டிருக்கிறார்கள். சமூகத்தில் பின்தங்கியவர்களை உயர்த்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வது இந்த கடனை அடைப்பதற்கான ஒரு வழியாகும்.
வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை. இந்தியாவின் எதிர்காலம் அறிவியல் மனப்பான்மை கொண்ட, தன்னலமின்றி சேவை செய்யும் இளைஞர்களை சார்ந்துள்ளது. உயர்கல்வி நிறுவனங்கள் இந்த மதிப்புகளை தங்கள் மாணவர்களிடம் வளர்க்க வேண்டும்.
இளம் மாணவர்கள் தாங்கள் எந்த தொழிலை தேர்ந்தெடுத்தாலும், அவர்களின் பணியானது தேசத்தை வலுப்படுத்தவும், மனித மதிப்புகளை வலுப்படுத்தவும் உதவுவதை உறுதி செய்ய வேண்டும்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.