ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்ற 3 பேர் கைது-என்.ஐ.ஏ. அதிரடி

ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்றதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.;

Update:2025-02-20 07:50 IST

புதுடெல்லி, -

இந்திய ராணுவத்தின் செயல்பாடுகள் குறித்த ரகசிய தகவல்களை பாகிஸ்தானை சேர்ந்த உளவாளிகளுக்கு விற்றது தொடர்பாக ஆந்திர மாநிலத்தின் புலனாய்வு பிரிவு போலீசார் கடந்த 2021-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் 2023-ல் இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது.

என்.ஐ.ஏ. நடத்திய விசாரணையில் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சிலர் பாகிஸ்தான் உளவாளிகளிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு இந்திய ராணுவம் குறித்த முக்கியமான தகவல்களை கசியவிட்டது தெரியவந்தது. இது தொடர்பாக 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், என்.ஐ.ஏ. தனது விசாரணையை தொடர்ந்தது.

இந்த நிலையில் கர்நாடகாவின் கார்வார் கடற்படை தளம் மற்றும் கேரளாவின் கொச்சி கடற்படை தளம் ஆகியவற்றில் ராணுவம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்த ரகசிய தகவல்களை பாகிஸ்தான் உளவாளிக்கு விற்றது தொடர்பாக 3 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தற்போது கைது செய்துள்ளனர்.

கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தை சேர்ந்த வேதன் லக்ஷமன் தண்டேல், அக்ஷய் ரவி நாயக் மற்றும் கேரள மாநிலம் கொச்சி மாவட்டத்தை சேர்ந்த அபிலாஷ் ஆகிய 3 பேரும் அந்தந்த மாநில போலீசாரின் உதவியுடன் கைது செய்யப்பட்டதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்