பீகாரில் முறைகேடாக நியமனம் செய்யப்பட்ட 33 ஆசிரியர்கள் பணிநீக்கம்; ஐகோர்ட்டு உத்தரவு

பீகாரில் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் முறைகேடாக நியமனம் செய்யப்பட்ட 33 ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.;

Update:2025-03-22 15:50 IST

கோபால்கஞ்ச்,

பீகாரில் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் ஆசிரியர் பணிக்கு புதிதாக 33 பேர் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால், இந்த பணி நியமனம் முறைகேடாக நடந்துள்ளது என விசாரணையில் தெரிய வந்ததும் அவர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

இதுபற்றி மாவட்ட கல்வி அதிகாரியான யோகேஷ் குமார் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, 2010-ம் ஆண்டுக்கு பின்னர் புதிதாக 33 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். ஆனால், இதற்கு முன் அந்த பதவிகளை வகித்து வந்தவர்கள், பணி ஓய்வு பெறவோ அல்லது மரணம் அடையவோ இல்லை. அந்த பதவிகள் காலியாகி விட்டன என முறைப்படி அறிவிக்கப்படவும் இல்லை.

இந்த சூழலில், பணியிடங்கள் காலி என மாவட்ட மேல்முறையீட்டு ஆணையம் அறிவித்து, அவற்றில் 33 ஆசிரியர்களை பணியில் அமர்த்தியது. இந்த உத்தரவுக்கு எதிராக மாவட்ட கல்வி அதிகாரி சார்பில் மாநில மேல்முறையீட்டு ஆணையத்திடம் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதன் மீது நடந்த விசாரணையில், அந்த ஆசிரியர்களை பணியில் இருந்து நீக்கவும், அவர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள தொகையை திரும்ப பெறவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து அந்த ஆசிரியர்கள் ஐகோர்ட்டுக்கு சென்றனர். எனினும், மாநில மேல்முறையீட்டு ஆணையத்துக்கு ஆதரவாக, ஆணையம் அளித்த உத்தரவை ஐகோர்ட்டு உறுதி செய்தது. இதன் தொடர்ச்சியாக, ஆசிரியர் பணியிடங்களில் முறைகேடாக பணியமர்த்தப்பட்ட 33 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்